தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், HD (HD) Korea Shipbuilding & Offshore Engineering HD KSOE நிறுவனத்தின் உலகளாவிய வணிகப் பிரிவு இயக்குநர் யங் ஹூன் குவான் தலைமையிலான உயர்மட்ட அலுவலர்கள் சந்தித்து கலந்துரையாடினர். அப்போது தமிழக இளைஞர்கள் சுமார் 15000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டது.
தென் கொரியாவை கொண்ட HD ஹுண்டாய் நிறுவனம், உலகின் மிகப் பெரிய கப்பல் கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாகும். தூத்துக்குடியில் அதிநவீன கப்பல் கட்டுமானத் தொகுதி ஒன்றை அமைப்பதற்காக இந்நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
இங்கு திட்டமிடப்பட்டுள்ள மிகப் பெரிய கப்பல் கட்டுமானத் தள திட்டத்தின் செயல்பாட்டு நிலைகள் குறித்து, இந்நிறுவனத்தின் உயர்மட்ட அலுவலர்கள் இன்று (ஜூன் 17) முதல்வர் விஜய் மற்றும் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா ஆகியோருடன் ஆலோசனை செய்தனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”புதிதாக உருவாகவுள்ள இந்தக் கப்பல் கட்டுமானத் திட்டத்தில் சுமார் 38,000 கோடி ரூபாய் (4 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 15,000 நபர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும், துணைத் தொழில்கள் மற்றும் உள்ளூர் விநியோகச் சங்கிலி மூலம் மாநிலத்தில், மேலும் பல வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
இத்திட்டத்திற்காக, சிப்காட் (SIPCOT) மற்றும் வ.உ.சி. துறைமுக ஆணையம் (VOCPA) ஆகியவற்றுக்கு இடையே National Shipbulding & Heavy Industries Park Tamil Nadu Limited (NSHIPTN) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது.
இக்கப்பல் கட்டுமானத் தொகுதியை நிறுவுவதற்கான முதல் கொள்கை அளவிலானஒப்புதலை, இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்திடம் இருந்து இந்நிறுவனம் பெற்றுள்ளது.
இச்சந்திப்பின்போது, இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து நிறுவனத்தின் உயர்மட்ட அலுவலர்கள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.
மேலும், தூத்துக்குடியில் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் நிறுவனத்தின் உறுதியான ஆர்வத்தையும் தெரிவித்தனர்.
அப்போது முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டம் தூத்துக்குடியில் விரைவாக செயல்படுத்தப்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்றும் திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் முழுமையான நிர்வாக ஆதரவும் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று தூத்துக்குடி மாவட்டம், அல்லிக்குளத்தில் விண்வெளி வாகனங்கள் பொதுத் தொழில்நுட்ப வசதி மையம் அமைக்க தமிழ்நாடு அரசு மற்றும் IN-SPACe நிறுவனத்திற்கிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
