நீட், டிலிமிட்டேசன் – திமுகவின் மடைமாற்றும் வேலை : அமித்ஷா தாக்கு!

Published On:

| By Kavi

NEET Delimitation DMK diversionary work

தங்கள் மீதான ஊழலை மறைப்பதற்காகவே திமுக நீட், டிலிமிட்டேசன் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். NEET Delimitation DMK diversionary work

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தார்.

இன்று (ஏப்ரல் 11) பிற்பகல் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்கியிருந்த அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது அதிமுக -பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அதிமுக பாஜக கூட்டணி உறுதியான செய்தியை அறிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா திமுகவை கடுமையாக தாக்கி பேசினார்.

அவர், “ஊழல், மோசடிகளை மறைப்பதற்காக திமுக அரசு சனாதனம், மும்மொழிக் கொள்கை, டிலிமிட்டேசன் ஆகியவற்றை பேசி மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறது. ஊழல் மோசடிகள், மகளிர் பிரச்சினைகள், தலித்துகள் மீதான தாக்குதல்கள், சட்டம் ஒழுங்கு ஆபத்து என திமுகவின் செயலிழந்த தன்மைதான் இந்த தேர்தலின் போது மிகப்பெரிய பேசுபொருளாக இருக்கும்.

ரூ.39,000 கோடி மதுபான ஊழல், மணல் சுரங்க ஊழல், மின்சாரத் துறை ஊழல், எல்காட் ஊழல், போக்குவரத்து துறையில் ஊழல், பணமோசடி, ஊட்டச்சத்து கிட் வழங்கியதில் ஊழல், இலவச வேட்டி சேலை திட்டத்தில் ஊழல் என பல ஊழல்களுக்கு திமுக அரசு மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். ஸ்டாலின் மற்றும் உதயநிதி மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள்” என்றார்.

மேலும் அவர், “மக்களை திசை திருப்புவதற்காக மட்டுமே நீட், டிலிமிட்டேசன் ஆகியவற்றை திமுக பயன்படுத்துகிறது. நாங்கள் தமிழ்நாட்டு மக்களைச் சந்திக்கும் போது, அவர்களின் பிரச்சினைகளை கவனத்தில் கொள்வோம். இந்த தேர்தலை மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து சந்திப்போம். திமுக போன்று மடைமாற்றம் செய்யமாட்டோம்.

தமிழையும், தமிழ் மக்களையும் பாஜக கவுரவமாக கருதுகிறதே தவிர, பிரச்சினைக்குரியதாக என்றுமே கருதியது இல்லை. தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் மதித்து பிரதமர் மோடி செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவினார்.

காசி தமிழ் சங்கத்தையும் சவுராஷ்ட்ரா தமிழ் சங்கத்தையும் பெருமையாக நடத்தியவர் மோடி. சிலம்பம் போட்டியை கேலோ இந்தியாவில் சேர்த்தவர் மோடி. திருக்குறளை மத்திய பாஜக அரசு உலகின் பல மொழிகளில் மொழிப்பெயர்த்து வருகிறது. ஏற்கனவே 63 மொழிகளில் மொழி பெயர்த்திருக்கிறோம்.

சுப்பிரமணிய பாரதியின் அத்தனை படைப்புகளையும் புத்தகங்களாக வெளியிட்டவர் மோடி. ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள் கூட இன்று தமிழில் எழுத முடிகிறது. ஆனால் மத்தியில் திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, இந்த நிலை இல்லை.

மத்திய ஆயுதப்படை தேர்வும் இப்போது தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எழுதமுடிகிறது. முன்னதாக இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதும் நிலை இருந்தது.

என்.டி.ஏ ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் இன்ஜினியரிங் மற்றும் மெடிக்கல் படிப்புகளின் பாடப்புத்தகங்கள் தாய் மொழியில் உள்ளது. கடந்த மூன்று வருடங்களாக நான் தமிழகம் வரும்போதெல்லாம் இன்ஜினியரிங், மெடிக்கல் படிப்பை தமிழிலும் வழங்குமாறு கூறி வருகிறேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தமிழ், தமிழ் என்று சொல்லும் திமுக இதுவரை தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்திருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share