மனதிற்கு ரொம்ப நெருக்கமான படம் மூக்குத்தி அம்மன் 2 – நடிகை நயன்தாரா நெகிழ்ச்சி

Published On:

| By Pandeeswari Gurusamy

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் என் மனதிற்கு ரொம்ப நெருக்கமான படம் என நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘மூக்குத்தி அம்மன் 2’ படம் உருவாகியுள்ளது. சுந்தர் சி. இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள நிலையில், இந்தப் படத்தில் சினேகா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி, யோகிபாபு, துனியா விஜய், ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் நவம்பர் 6ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் இன்று மாலை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் நடிகை நயன்தாரா வெயிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “சில திரைப்படங்கள், படப்பிடிப்பு முடிந்த பிறகும் நீண்ட காலத்திற்கு நம் இதயத்திற்கு மிகவும் நெருக்கமாகவே இருக்கும். என்னைப் பொறுத்தவரை மூக்குத்தி அம்மன் 2 அப்படிப்பட்ட ஒரு திரைப்படம்.

என் இயக்குநர் சுந்தர் சி சார், இந்தத் திரைப்படத்திற்கு உங்கள் தொலைநோக்குப் பார்வை, அன்பு மற்றும் பேரார்வத்தைக் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி. உங்களுடன் பணியாற்றியது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் காட்டிய அக்கறைக்கும், இந்தப் பயணத்தை மிகவும் மறக்க முடியாததாக மாற்றியதற்கும் நன்றி. இந்தத் திரைப்படத்திற்காக உங்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டிருப்பேன்.

ADVERTISEMENT

என் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்தத் திரைப்படத்தை நம்பி எங்களுக்கு ஆதரவளித்ததற்கு நன்றி. ஒரு கதையை முழு மனதாக நம்பும் ஒரு தயாரிப்பாளர் அமைவது, இந்தப் பயணத்தின் ஒவ்வொரு அடியையும் மேலும் அர்த்தமுள்ளதாக்குகிறது.

ரெஜினா, உன்னோடு இந்தப் பயணத்தைப் பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி. உனது எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் அன்பும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

ADVERTISEMENT

குஷ்பு மேடம் மற்றும் ஸ்னேகா மேடம், உங்கள் இருவருடனும் இணைந்து இந்தத் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருந்ததை நான் என்றும் பொக்கிஷமாகக் கருதுகிறேன். உங்கள் இருவருக்கும் என் பெரிய அணைப்பையும், அன்பையும் பகிர்ந்து கொள்கிறேன்.

இவ்வளவு சிறப்பான நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இந்தப் பயணத்தைப் பகிர்ந்து கொண்டதை நான் அதிர்ஷ்டமாக உணர்கிறேன்.

நாங்கள் இணைந்து உருவாக்கிய இந்த உலகத்தை, நீங்கள் அனைவரும் திரையில் காணும் தருணத்திற்காக இப்போது நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஓம் சக்தி!” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share