நடிகை நயன்தாராவுக்கு 60 அடியில் பெரிய கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.
மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘மூக்குத்தி அம்மன் 2’ படம் உருவாகியுள்ளது. சுந்தர் சி. இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.
ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள நிலையில், இந்தப் படத்தில் சினேகா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி, யோகிபாபு, துனியா விஜய், ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, இந்தப் படத்தின் டிரெய்லர் ‘வேர்ல்ட் ஆஃப் மகாசக்தி’ (World of Mahasakthi) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
ட்ரெய்லரில் நயன்தாரா பெண் போலீஸ் மற்றும் அம்மன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ரெஜினா மற்றும் துனியா விஜய் ஆகியோர் தீய சக்திகளாக நடித்துள்ளனர். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நவம்பர் 6-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் சாட்டிலைட் உரிமத்தைத் தமிழில் விஜய் டிவி பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இப்படம் தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் “இந்த நாள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக ஒரு நடிகைக்காகப் படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக இவ்வளவு உயரத்தில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. அதுவும் 60 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்துள்ளனர் என்று என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால், இந்தச் செயல் என்னை வியக்க வைக்கிறது. நான் ஆச்சரியத்தில் இருக்கிறேன்” என்று ரெஜினா கேசண்ட்ரா தெரிவித்துள்ளார்.
முன்னதாக தாய் கிழவி திரைப்படத்திற்காக நடிகை ராதிகாவிற்கு சென்னையில் 50 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டது. இதேபோல் ஆந்திராவில் யசோதா, சகுந்தலம் படங்களின் போது நடிகை சமந்தாவிற்கும், நடிகையர் திலகம் படம் வெளியான போது கீர்த்தி சுரேஷ்க்கும் 40 – 50 அடியில் கட் அவுட் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
