இன்று ஒரு மாணவன் காலையில் கண்விழித்துத் தனது மொபைலை கையில் எடுத்த சில நிமிடங்களிலேயே நீட் (NEET) தேர்வு குளறுபடிகள், வினாத்தாள் கசிவு, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, சிலிண்டர் விலை உயர்வு மற்றும் நிலையற்ற பொருளாதாரம் போன்ற பல எதிர்மறைச் செய்திகளைச் ஸ்க்ரோல் செய்கிறான். இந்தச் சிக்கல்கள் அவனுக்கு நேரடியாகப் பொருந்தாவிட்டாலும், அந்தச் செய்திகள் தரும் ஒட்டுமொத்த அழுத்தத்தையும் அவன் மனதிற்குள் (Mental Health) அறியாமலேயே உள்வாங்கிக் கொள்கிறான்.
ஒரு காலத்தில் அரசியல் விவாதங்கள் தொலைக்காட்சியிலும், பொருளாதாரச் செய்திகள் நாளிதழ்களிலும் மட்டுமே இருந்தன. சாதாரண மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அவற்றுக்கும் இடையே ஒரு தெளிவான எல்லைக்கோடு இருந்தது. ஆனால் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அந்த எல்லை முற்றிலும் அழிந்துவிட்டது.
தொடர் நோட்டிபிகேஷன்களும், அடுத்தடுத்து வரும் உலகளாவிய நெருக்கடிகளும் இன்றைய தலைமுறையினருக்கு மன அழுத்தத்தை ஒரு சாதாரணமான விஷயமாக (Normalisation of Stress) மாற்றிவிட்டன. ஊடகங்கள் காட்டும் தொடர் கவலைகள் மனிதர்களுக்கு ஒருவித திகைப்பையும், உதவியற்ற உணர்வையும் (Helplessness) உருவாக்குவதாக உளவியல் ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
கல்வித் தேர்வுகளும் எதிர்கால பயமும்
சமீபத்திய நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் தேர்வுகள் ரத்து குறித்த விவாதங்கள் எழுந்தபோது, இந்திய மாணவர்கள் மிகப்பெரிய உணர்ச்சிப் போராட்டத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டனர். நமது சமூகத்தில் போட்டித் தேர்வுகள் என்பது வெறும் மதிப்பெண் மட்டுமல்ல; அது பெற்றோரின் அசாத்திய கனவு, குடும்பத்தின் பொருளாதார எதிர்காலம் மற்றும் சமூக அந்தஸ்தோடு ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளது.
மனநிலை கோட்பாடு (Carol Dweck – Mindset Theory): எந்தவொரு நபரின், சுயமதிப்பு (Self-esteem) அவரது வெற்றியை மட்டுமே சார்ந்து தீர்மானிக்கப்படுகிறதோ, அவர் ஒரு நிச்சயமற்ற அல்லது சாதகமற்ற சூழ்நிலையைச் சந்திக்கும்போது அதீத மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்.
தேர்வு முறைகேடுகள் நடக்கும்போது, “நாம் எவ்வளவுதான் கஷ்டப்பட்டுப் படித்தாலும் இந்த சிஸ்டத்தில் எதுவும் மாறப்போவதில்லை” என்ற பயமும் விரக்தியும் மாணவர்களிடம் எழுகிறது. இதேபோன்ற ஒரு நிச்சயமற்ற நிலைதான், சைக்காலஜி படிக்கும் மாணவர்களிடையே அவர்களின் ஆர்சிஐ (RCI) உரிமம் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பு குறித்தும் நிலவுகிறது.
மூளையைத் தாக்கும் ‘நிச்சயமற்ற தன்மை’ (Uncertainty)
மனித மூளை எப்போதும் ஒரு விஷயத்தில் துல்லியமான கணிப்பை (Predictability) விரும்புகிறது. நாளை என்ன நடக்கும் என்று தெரிந்தால் மனதால் அதனை எதிர்கொள்வது எளிது. ஆனால், தொடர் நிச்சயமற்ற நிலை நிலவிக் கொண்டே இருக்கும்போது, மூளை எப்போதும் ஒருவித ‘அலர்ட்’ (State of alertness) நிலையிலேயே இருக்கப் பழகிவிடுகிறது.
ஸ்ட்ரெஸ் அப்ரைசல் கோட்பாடு (Lazarus & Folkman, 1984): நம் வாழ்க்கையைப் பாதிக்கும் முக்கிய நிகழ்வுகளின் மீது நமக்கு எந்தவொரு கட்டுப்பாடும் (Control) இல்லை என்று நாம் உணரும்போதுதான் மன அழுத்தம் அதன் உச்சத்தை அடைகிறது.
இன்றைய இளைஞர்கள் தங்களை எப்போதும் “டயர்டாகவே இருக்கிறேன்” (Tired all the time) என்று சொல்வதைக் கேட்டிருப்போம். இதற்குப் பின்னணியில் எந்தவொரு உடல்நலக் குறைபாடும் இருப்பதில்லை; மாறாக, எதிர்காலம் குறித்த பயமும், நிச்சயமற்ற தன்மையும் அவர்களின் மன ஆற்றலை முழுமையாக உறிஞ்சுவதுதான் இதற்குக் காரணம்.
சோஷியல் மீடியாவும் ‘ஒப்பீட்டு’ நரகமும்
இன்று நாம் நம்முடைய கவலைகளைத் தனிமையில் கடப்பதில்லை. ஒருபுறம் நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகள் இருக்க, மறுபுறம் இன்ஸ்டாகிராம் மற்றும் லிங்க்ட்இன் (LinkedIn) போன்ற தளங்களில் மற்றவர்களின் வெற்றிக் கதைகளும், சான்றிதழ்களும் நம் கண் முன்னால் வந்து குவிகின்றன.
- சமூக ஒப்பீட்டுக் கோட்பாடு (Leon Festinger, 1954): மனிதர்கள் இயல்பாகவே தங்களது திறமைகளையும் சாதனைகளையும் மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் குணம் கொண்டவர்கள்.
- சோஷியல் மீடியாக்களில் காட்டப்படும் ‘வடிவமைக்கப்பட்ட’ வெற்றிகள் (Curated success) இளைஞர்களிடம் ஒரு தேவையற்ற அழுத்தத்தை உருவாக்குகிறது. அதில் இருக்கும் பர்ன்அவுட் (Burnout), கடுமையான உழைப்பின் சோர்வு மற்றும் தோல்விகள் யாருக்கும் தெரிவதில்லை.
பொருளாதார பயமும் முன்கூட்டிய பதற்றமும் (Mental Health – Anticipatory Anxiety)
வேலைக்குச் செல்லும் இளைஞர்களும் இந்த தேசிய அளவிலான நிச்சயமற்ற தன்மையால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். பணவீக்கம், மளிகைப் பொருட்களின் விலை உயர்வு, கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலைநீக்கம் (Layoffs) போன்ற விவாதங்கள் குடும்பங்களுக்குள் பொருளாதார பாதுகாப்பற்ற தன்மையை உருவாக்குகின்றன.
இதனால் பலருக்கும் ‘ஆண்டிசிபேட்டரி ஆங்க்சைட்டி‘ (Anticipatory Anxiety) எனப்படும், மன அழுத்தம் நடப்பதற்கு முன்பாகவே அதை நினைத்துப் பயப்படும் மனநிலை உருவாகிறது. “நம்ம வேலை பாதுகாப்பா இருக்குமா?”, “நம்மளால எதிர்காலத்தை ஒழுங்கா பிளான் பண்ண முடியுமா?” என்ற கேள்விகள் அவர்களின் மன ஆற்றலை முழுமையாகத் தீர்த்துவிடுகின்றன. இதனால் அன்றாட வாழ்க்கையில் மிகச் சாதாரணமான முடிவுகளை எடுப்பது கூட அவர்களுக்கு ஒரு பெரிய மனப் பாரமாக மாறிவிடுகிறது.
கற்றறிந்த உதவியற்ற தன்மை (Learned Helplessness)
அரசியல் ரீதியாக வெளியாகும் பயமுறுத்தும் பேச்சுக்கள் மற்றும் விவாதங்கள் இளைஞர்களின் பாதுகாப்பற்ற உணர்வை மேலும் தூண்டுகின்றன. இதன் உச்சகட்டமாக அவர்களுக்குள் ஒரு ஆபத்தான மனநிலை உருவாகிறது.
மார்ட்டின் செலிக்மேனின் கோட்பாடு (1975): ஒரு மனிதன் தனது கட்டுப்பாட்டில் இல்லாத தொடர்ச்சியான மன அழுத்தங்களைச் சந்திக்கும்போது, அவனுக்குள் ‘கற்றறிந்த உதவியற்ற தன்மை’ (Learned Helplessness) உருவாகிறது. அதாவது, “நான் என்ன செய்தாலும் என் வாழ்க்கையில் எதுவும் மாறப்போவதில்லை” என்று அவன் முழுமையாக நம்பத் தொடங்கிவிடுவான்.
இந்த நிலைக்குத் தள்ளப்படும் இளைஞர்கள், தங்களது எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை இழந்து, எதிலும் ஆர்வமில்லாமல், ஒருவித உணர்ச்சியற்ற நிலைக்கு (Emotional numbness) ஆளாகிறார்கள். வெளியில் பார்ப்பதற்கு இது ‘சோம்பேறித்தனம்’ அல்லது ‘முயற்சியின்மை’ போலத் தெரிந்தாலும், உண்மையில் அது தொடர் அழுத்தங்களால் அவர்களின் மனம் அடைந்த முழுமையான சோர்வின் வெளிப்பாடே ஆகும்.
இதிலிருந்து மீள்வது எப்படி?
சூழ்நிலைகள் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதற்கான நம்முடைய எதிர்வினையை (Response) நம்மால் நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். உளவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கும் சில எளிய வழிகள்:
- டூம்ஸ்க்ரோலிங் (Doomscrolling) செய்வதைக் குறையுங்கள்: காலை மற்றும் இரவு நேரங்களில் நாட்டின் எதிர்மறைச் செய்திகள் மற்றும் சோஷியல் மீடியா விவாதங்களைத் தேடித் தேடிப் பார்ப்பதைத் தவிர்த்திடுங்கள்.
- சமூக ஒப்பீடுகளை நிறுத்துங்கள்: லிங்க்ட்இன் அல்லது இன்ஸ்டாகிராமில் மற்றவர்கள் காட்டும் பிம்பம் அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
- உங்களது கட்டுப்பாட்டில் உள்ளவற்றில் கவனம் வையுங்கள்: உங்களது உழைப்பு மற்றும் தினசரி பழக்கவழக்கங்கள் மட்டுமே உங்களது கட்டுப்பாட்டில் உள்ளவை. தேர்வு முடிவுகளோ அல்லது அரசாங்கக் கொள்கைகளோ உங்கள் கைகளில் இல்லை.
- சுயமதிப்பைத் தனியாகப் பிரியுங்கள்: உங்களது மதிப்பெண்களோ, உங்களது மாதச் சம்பளமோ அல்லது உங்களது பதவியோ உங்களது தனிப்பட்ட மனித மதிப்பை (Personal worth) ஒருபோதும் தீர்மானிக்காது.
இன்றைய சூழலில் இளைஞர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு அல்லது “எப்பொழுதும் சோர்வாக இருக்கும் நிலை” என்பது அவர்களின் தனிப்பட்ட பலவீனம் அல்ல; அவர்கள் வாழும் இந்த நிச்சயமற்ற காலத்தின் வெளிப்பாடு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்!
