நடிகை நமீதா தனது கணவரும் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான வீரேந்திர சவுத்திரியுடன் இலங்கையின் வடக்கு பகுதியில் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
நமீதா – வீரேந்திர சவுத்திரி தம்பதி நேற்று (அக்டோபர் 4) யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு சுற்றுலாத்துறை தலைவர் கலாநிதி ஜெ. விவேகானந்தனை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது வடக்கு பகுதியில் தற்போது சுற்றுலாத்துறை எப்படி உள்ளது, சுற்றுலாவை மேலும் மேம்படுத்த என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் நமீதா – வீரேந்திர சவுத்திரி தரப்பில் வடக்கு பகுதியில் செய்ய திட்டமிட்டுள்ள முதலீடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆனால் நடிகை நமீதா – வீரேந்திர சவுத்ரி தம்பதி எந்த மாதிரியான சுற்றுலா திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளனர், எவ்வளவு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
நமீதா பயணத்தால் தமிழர்கள் கொந்தளிப்பு
இதனிடையே திலீபன் நினைவேந்தல் மற்றும் திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், அவற்றை திசைதிருப்பும் வகையில் நமீதாவின் யாழ்ப்பாண வருகை முன்னிலைப்படுத்தப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
