முதல்வர் விஜய் பற்றியும் அவரது தாயார் பற்றியும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், ‘எங்கே உங்கள் அப்பாவை காணும்’ என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்திருந்தார். இதற்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 15) பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பேசிய அக்கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், “சட்டப்பேரவையில போய்ட்டு அப்பா எங்க அப்பா எங்கனு தேடுனா எப்படி தெரியும்?. வீட்ல போய்ட்டு அம்மா கிட்ட கேட்டா தான அப்பா யாருனு தெரியும்” என்று முதல்வர் விஜய்யை பற்றியும் அவரது தாயார் பற்றியும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அவருக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘அநாகரீகமான பேச்சு. ஒரு தலைவருக்கான பேச்சு அல்ல. ஏதோ ஒரு தெருமுனை பேச்சாளரை போல பேசியிருக்கிறார். இது ஏற்புடையது அல்ல. இதை நான் கடுமையாக வன்மையாக கண்டிக்கிறேன்.
இருக்கும் இடத்திற்கு தகுந்த வகையிலும், தான் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்ற வகையிலும் பேச வேண்டும். நாகரீகமாக பேச வேண்டும். இதுபோன்று ஆயிரம் அவதூறுகளை அவர்கள் ஏவினாலும் கூட நாகரிகமான முறையில் வெற்றி நடை போட எங்கள் முதல்வர் சொல்லிக் கொடுத்திருக்கிறார்” என்றார்.
அமைச்சர் வினோத், “நயினார் நாகேந்திரன் முதல்வரிடமும் பொதுமக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
விசிகவை சேர்ந்த அமைச்சர் வன்னி அரசு, ” தமிழ்நாடு முதலமைச்சர் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் மிக மோசமான அருவருக்கத்தக்க வகையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய அநாகரிகமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
பாஜக சனாதனிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி குறித்து இந்திய தலைமை அமைச்சர் மோடி பேசாத அவதூறா?
காஷ்மீரில் 8 வயது ஆசிபாவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி, 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்து, வரவேற்பு அளித்தவர்கள் தான் பாஜகவினர்.
பெண்களுக்கு எதிரான வெறுப்பும், அவதூறும் தான் அவர்கள் பேசும் அரசியலின் அடிப்படை. இதற்கு முன்னரும் நடிகை ஒருவர் குறித்தும் நயினார் அவர்களின் பேச்சு தரம் தாழ்ந்து அமைந்திருந்தது. நயினார் நாகேந்திரன் தமது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் முதல்வர் பற்றி அவதூறாக பேசிய நயினார் நாகேந்திரன் மீது டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் வர்த்தினி ஆன்லைன் மூலம் அளித்த புகாரில், ‘அரசியல் விமர்சனங்களை மீறி குடும்ப உறுப்பினரை தனிப்பட்ட முறையில் இழிவு படுத்துவது கவலைக்குரியது. நயினார் நாகேந்திரன் பேச்சுகள் மக்கள் மத்தியில் அவதூறு வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது பற்றி வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தேர்தலுக்கு முன்னதாகவும் நயினார் நாகேந்திரன், முதல்வர் விஜய் பற்றி அவதூறாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
