நகங்களை அழகாக வைத்துக்கொள்வதில் பலரும் கவனம் செலுத்துகிறோம். நெயில் பாலிஷ், மெனிக்யூர் என அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், நகங்களின் ஆரோக்கியத்தைப் பற்றியும் கவனிக்க வேண்டியது அவசியம். நகங்களின் நிறம், வடிவம், தடிமன் ஆகியவற்றில் ஏற்படும் சில மாற்றங்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்கான அறிகுறிகளாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நகங்களின் நிறம் மாறுகிறதா?
ஆரோக்கியமான நகங்கள் பொதுவாகச் சீரான நிறத்துடன் காணப்படும். நகங்கள் திடீரென மஞ்சள் நிறமாக மாறுவது பூஞ்சைத் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளால் ஏற்படலாம். சில நேரங்களில் உடல்நலக் குறைபாடுகளுடனும் இது தொடர்புடையதாக இருக்கலாம்.
நகங்கள் வெளிறிப்போவது, நீல நிறத்தில் மாறுவது அல்லது புதிய கருமையான கோடு தோன்றுவது போன்ற மாற்றங்களையும் அலட்சியப்படுத்தக் கூடாது. குறிப்பாக, புதிதாகத் தோன்றும் அல்லது அகலமாகிக்கொண்டிருக்கும் கருமையான கோடு இருந்தால் தோல் மருத்துவரை அணுகுவது அவசியம்.
நகங்கள் உடைந்து பலவீனமாக இருக்கிறதா?
சிறிய வேலைகளைச் செய்யும்போதே நகங்கள் உடைவது, அடிக்கடி பிளவுபடுவது போன்றவை தண்ணீரில் நீண்ட நேரம் கைகளை வைத்திருப்பது, ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் ஏற்படலாம்.
சிலருக்கு ஊட்டச்சத்துக் குறைபாடுகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம். நகங்கள் கரண்டி போன்ற வடிவத்தில் நடுப்பகுதியில் பள்ளமாகத் தெரிந்தால் இரும்புச்சத்துக் குறைபாடு உள்ளிட்ட காரணங்களைப் பரிசோதிக்க வேண்டியிருக்கலாம். மருத்துவரின் ஆலோசனையின்றி இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
நகங்களில் பள்ளங்களும் கோடுகளும் தோன்றினால்?
நகங்களின் மேற்பரப்பில் சிறிய பள்ளங்கள் தோன்றுவது சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம். நகங்களின் குறுக்கே ஆழமான கோடுகள் உருவாவது, காய்ச்சல், கடுமையான நோய் அல்லது உடல் அழுத்தத்துக்குப் பிறகு நக வளர்ச்சி தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டதைக் குறிக்கலாம்.
அதேபோல், நகத்தைச் சுற்றி சிவத்தல், வீக்கம், வலி அல்லது சீழ் வெளியேறுதல் போன்றவை தொற்றுக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
நகங்களை ஆரோக்கியமாகப் பராமரிப்பது எப்படி?
நகங்களைச் சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருக்க வேண்டும். நகங்களைக் கடிப்பது, நகத்தைச் சுற்றியுள்ள தோலை வெட்டுவது, கூர்மையான பொருட்களால் நகத்தின் அடிப்பகுதியைச் சுத்தம் செய்வது போன்ற பழக்கங்களைத் தவிர்க்கவும்.
நகங்களில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் நோயைக் குறிக்காது. ஆனால், நீடித்த நிறமாற்றம், வலி, வீக்கம் அல்லது திடீர் வடிவ மாற்றம் இருந்தால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்வதே சரியானது.
