தேசிய திரைப்பட விருதுகள்.. பாஜகவை விளாசிய அமைச்சர் வன்னி அரசு

Published On:

| By Mathi

TN Minister Vanni Arasu slams BJP lead Union Govt. over film award bias

மத்திய அரசு அறிவித்துள்ள 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில் பாஜகவின் வெறுப்பரசியல் தொடருகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் தமிழக சமூக நீதித் துறை அமைச்சருமான வன்னி அரசு (Vanni Arasu) கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளதாவது: பாஜகவின் வெறுப்பரசியல் படைப்புலகிலும் தொடருகிறது என்பதற்கான உதாரணம், கடந்த 2024ஆம் ஆண்டுக்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு தான்.

ADVERTISEMENT

விருது வென்றுள்ள திரை கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் முதலில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

கலை என்றால் அது படைக்கப்படும் சமூகத்தின் கலாச்சாரத்தை, பண்பாட்டை, அம்மக்களுக்கான அரசியலை தாங்கி நிற்கும். அது போலவே திரைப்படங்களும் சமூகத்தின் காலக்கண்ணாடியாக விளங்குகின்றன. இன்று அந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கு பின்னால் உள்ள சனாதன அரசியலையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

ADVERTISEMENT

காஷ்மீரிகளின் அரசியலமைப்பு சட்ட உரிமையான பிரிவு 370 ரத்தை அடிப்படையாக கொண்டு, ஒன்றிய பாஜக அரசின் சனநாயக விரோத போக்கை நியாயப்படுத்தும் ‘ஆர்டிகள் 370’ எனும் வெளிப்படையான இசுலாமிய வெறுப்பு பரப்புரை படத்துக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நடிகைக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கொடுத்துள்ளார்கள்.

வீர(?) சாவர்க்கர் என்ற படத்தை இயக்கிய நடிகர் ரந்தீப் ஊடாவுக்கு சிறந்த புதுமுக இயக்குநர் என்று தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதே 2024 காலகட்டத்தில் தமிழில் வெளியான படைப்புகளின் பட்டியலை பார்த்தால் நமக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அவை புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் நமக்கு எளிதில் புரிந்துவிடுகிறது.

இயக்குநர் மாரி செல்வராஜின் வாழை, இயக்குநர் வினோத்ராஜின் கொட்டுக்காளி, இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த தங்கலான், அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி நடித்து – இசைஞானி இசையில் வெளிவந்த ஜமா, இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கி நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா, அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவின் லப்பர் பந்து என புறக்கணிக்கப்பட்ட படங்களின் பட்டியல் நீள்கிறது. இவையெல்லாம் அடித்தட்டு மக்களின் சமூக வாழ்வியலை சிறப்பாகவும் யதார்த்தமாகவும் படைப்பாக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, வாழை திரைப்படம் வந்த போது கட்டாயம் இந்த படம் தேசிய விருதுக்கு தகுதியான கலை படைப்பு என மக்கள் கொண்டாடினார்கள். அது போலத்தான் நடிகர் சூரி நடித்த கொட்டுக்காளியும் கொண்டாடப்பட்டது. இப்புறக்கணிப்பு, தமிழர்களின் பெரும்பான்மை மக்களின் உணர்வு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவே கருதமுடிகிறது.

பழங்குடிகளுக்கு எதிரான இந்திய ஒன்றிய அரசின் வன்முறையை அம்பலப்படுத்திய இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படமும், அதே ஒன்றிய அரசின் கொள்கைகளால் காஷ்மீரில் வீரமரணமடைந்த நிஜ ராணுவ வீரரின் கதையை சொன்ன இராஜ்குமார் பெரியசாமி இயக்கி, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படமும் 2024ல் தான் வெளிவந்தது.

தமிழிலும், இந்திய அளவிலும் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் மீதான விமர்சனங்களை ஒருசாரார் முன்வைத்தாலும், தேர்ந்தெடுக்கப்படாத படைப்புகளும் அவை புறக்கணிக்கப்பட்டதற்கு பின்னுள்ள நுண் அரசியலும் தான் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்துகிறது. அதுவே புறக்கணிப்பட்ட அப்படைப்புகளுக்கான உயர்ந்த அங்கீகாரமாகவும் மக்கள் மன்றத்தில் என்றும் கொண்டாடப்படும். இவ்வாறு அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share