நகராட்சி நிர்வாகத் துறையில் நடந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு, பணி நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை மூன்று கடிதங்களை அனுப்பியது. அதில் இந்த முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்த விவகாரத்தில் அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அமலாக்கத்துறையின் ஆதாரங்களின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம் அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.
தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யாததை எதிர்த்து இன்பதுரை தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசும், முன்னாள் அமைச்சர் நேரு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி தமைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
அப்போது ”குறிப்பிட்ட நபருக்கு (முன்னாள் அமைச்சர் நேரு) எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டு உத்தரவில் கூறவில்லை. முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவே உத்தரவிடப்பட்டுள்ளது” என நீதிபதிகள் விளக்கமளித்தனர்.
தொடர்ந்து இந்த அனைத்து வழக்குகளும் ஜூன் 23ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டன.
இந்தசூழலில் நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக நேரு தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் தலைமை நீதிபதி தர்மதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று (ஜூன் 5) காலை முறையீடு செய்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் அரசு தலைமை வழக்கறிஞர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.
தொடர்ந்து மதிய உணவு இடைவெளிக்கு பின்னர் 2.15 மணிக்கு நீதிபதிகள் முன் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நகராட்சி நிர்வாகத் துறையில் அதிகாரிகள் நியமனம் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது என்று குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட வழக்குகள் விசாரணை இம்மாத இறுதியில் வரஉள்ள நிலையிலும், அடுத்த விசாரணை வரை எந்த கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட மாட்டாது என முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்த நிலையிலும் எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தலைமை நீதிபதி அமர்வு கூறியிருந்தது.
அதன்படி, முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் பிறருக்கு எதிராக ஜூன் 23 வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் மாநில அரசிடம் கூறியுள்ளது.
