“90-களின் குழந்தைகளுக்குச் சக்திமான் என்பது வெறும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் மட்டுமல்ல; அது ஒரு கலாச்சாரம், ஒரு நன்னெறிப் பாடம்.” ஞாயிற்றுக்கிழமை மதியங்களில் தூர்தர்ஷன் முன் தவம் கிடந்த தலைமுறைக்கு ‘சக்திமான்’ வழங்கிய சிறு சிறு அட்வைஸ்ஸும் முக்கியமானவை அவை இன்றும் பலருக்கும் நினைவிருக்கும். இந்த நிலையில், நவீனத் தொழில்நுட்பத்துடன் ‘சக்திமான்’ (Shaktimaan) திரைப்படமாக உருவாகி வரும் வேளையில், அதன் நாயகன் குறித்து எழுந்துள்ள சர்ச்சை இந்தியத் திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
குறிப்பாக, சக்திமானாக ரன்வீர் சிங் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில், அந்த கதாபாத்திரத்தை உருவாக்கிய முகேஷ் கண்ணா அதற்குத் தெரிவித்திருக்கும் கடும் எதிர்ப்பு, மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
90-களின் நாயகன் மீண்டும் வருகிறான்!
இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோவான சக்திமானைப் பெரிய திரையில் கொண்டு வரும் முயற்சிகள் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருகின்றன. ‘மின்னல் முரளி’ புகழ் இயக்குநர் பாசில் ஜோசப் இதனை இயக்கப்போவதாகவும், சோனி பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்திய சினிமாவின் திறமைவாய்ந்த நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங் இந்தப் பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், ஆரம்பத்திலிருந்தே கதாபாத்திரத்தின் ‘ஆன்மா’ சிதைந்துவிடக் கூடாது என்பதில் முகேஷ் கண்ணா பிடிவாதமாக இருந்தார்.
ரன்வீர் சிங் ஏன் கூடாது? – முகேஷ் கண்ணாவின் வாதம்
அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய முகேஷ் கண்ணா, ரன்வீர் சிங் ஒரு மிகச்சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும், ஆனால் ‘சக்திமான்’ கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமானவர் அல்ல என்றும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இதற்குக் காரணமாக அவர் முன்வைக்கும் வாதங்கள்:
- கலாச்சாரப் பிம்பம்: சக்திமான் என்பது யோகா, தியானம் மற்றும் ஐந்து பூதங்களின் சக்தியைக் கொண்டது. அந்தப் பாத்திரத்தை ஏற்கும் நடிகருக்கு கிளீன் இமேஜ் இருக்க வேண்டும்.
- பழைய சர்ச்சைகள்: ரன்வீர் சிங் கடந்த காலங்களில் வெளியிட்ட கவர்ச்சிகரமான போட்டோஷூட் (Nude Photoshoot) மற்றும் அவரது அதீத விளையாட்டுத்தனமான சுபாவம் சக்திமானின் கம்பீரத்தைக் குறைத்துவிடும் என்று கண்ணா கருதுகிறார்.
- பயிற்சி மற்றும் ஒழுக்கம்: “நீங்கள் என்னதான் பெரிய ஸ்டாராக இருந்தாலும், உங்கள் தனிப்பட்ட இமேஜ் கதாபாத்திரத்தின் சிதைத்திடக்கூடாது. ரன்வீரின் இமேஜ் ஒரு ‘சக்திமானுக்கு’ உரிய அமைதியைத் தராது” என்பது அவரது கருத்து.
“இமேஜ்” ஏன் முக்கியமானது?
ஒரு சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்திற்கு நடிகரைத் தேர்வு செய்யும்போது இமேஜ் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக, சூப்பர்மேன் பாத்திரத்தில் நடிப்பவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஒரு கண்ணியமான லைப்ஸ்டைலை கொண்டிருக்கவேண்டும் என்பது ஹாலிவுட் விதி. முகேஷ் கண்ணாவைப் பொறுத்தவரை, சக்திமான் என்பது குழந்தைகளுக்கு நல்வழி காட்டும் ஒரு ஆசான் போன்றவர். “ஒழுக்கத்தைப் போதிக்கும் ஒரு பாத்திரத்தில் நடிப்பவர், சமூகத்தில் சர்ச்சைக்குரியவராக இருக்கக்கூடாது” என்று அவர் ஆணித்தரமாக நம்புகிறார்.
இயக்குநரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பும்
மறுபுறம், பாசில் ஜோசப் போன்ற ஒரு திறமையான இயக்குநர் ரன்வீர் சிங்கை எப்படிச் செதுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஒரு தரப்பு ரசிகர்களிடம் உள்ளது. ரன்வீர் சிங் கதாபாத்திரத்திற்காகத் தன்னை முழுமையாக மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவர். ‘பத்மாவத்’ படத்தில் அலாவுதீன் கில்ஜியாகவும், ’83’ படத்தில் கபில்தேவாகவும் வாழ்ந்தவர் அவர். இருப்பினும், முகேஷ் கண்ணாவின் இந்த “வேண்டாம்” என்ற குரல் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.
முகேஷ் கண்ணா முன்வைக்கும் மற்ற முக்கியக் குறிப்புகள்:
- சக்திமான் என்பது வெறும் ஆக்ஷன் படம் அல்ல, அது இந்தியாவின் ஆன்மீக பலத்தைப் பேசும் படம்.
- நடிகருக்குப் புகழ் இருப்பதை விட, அந்தப் பாத்திரத்தின் புனிதத்தைப் புரிந்து கொள்ளும் முதிர்ச்சி இருக்க வேண்டும்.
- “சக்திமானாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம், ஆனால் அந்தத் தகுதி ரன்வீரிடம் இப்போதைக்கு இல்லை”
Shaktimaan புனிதம் காக்கப்படுமா? பிரம்மாண்டம் வெல்லுமா?
தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் ‘சக்திமான்’ மீண்டும் திரைக்கு வருவது வரவேற்கத்தக்கது. ஆனால், முகேஷ் கண்ணா சொல்வது போல, ஒரு கதாபாத்திரத்தின் அடிப்படைத் தன்மையைச் சிதைத்துவிட்டுப் பிரம்மாண்டத்தை மட்டும் நம்பிப் படம் எடுப்பது ரசிகர்களை ஏமாற்றுவதாகிவிடும். இமேஜ் அரசியல் ஒருபுறம் இருந்தாலும், கதாபாத்திரத்தின் புனிதத்தைக் காப்பதற்கும், இன்றைய தலைமுறைக்குப் பொருத்தமான நாயகனைத் தேடுவதற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு உள்ளது. அதில் படக்குழு எப்படிப் பயணிக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
