தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்தும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலவுகிறது. இரண்டு முறை ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தலைவர் விஜய். ஆனால் ஆளுநர், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை எனக் கூறி, 118 எம்எல்ஏக்களின் பெயர் பட்டியலை வழங்கினால் மட்டுமே ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கோரி விஜய் கடிதம் எழுதினார். நிர்வாகிகளை நேரில் அனுப்பியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே, ஐந்து எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி தவெக விற்க்கு ஆதரவு அளித்துள்ளது. தலா இரண்டு எம்எல்ஏக்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இன்று கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஆளுநர் ஆங்கிலச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அதிமுகவும் திமுகவும் இணைந்து 118 எம்எல்ஏக்கள் கொண்ட பட்டியலை வழங்கினால் அதை ஏற்க தயார்” எனத் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், புதுவையில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு ஆலோசனை நடத்தினார்.
அதிமுக ஆதரவு கேட்டதாகவும், அதுபற்றி முக ஸ்டாலின் இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் திமுக நிர்வாகி டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க இன்று நேரம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பரபரப்பான தமிழக அரசியல் சூழலில் இன்று காலை சென்னையில் அதிமுக எம்பி தம்பிதுரை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “இறைவன் அருளால் உரிய காலத்தில் அதிமுக ஆட்சி அமையும். அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அதிகாரபூர்வ அறிவிப்பை எடப்பாடி பழனிச்சாமி வெளியிடுவார். பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமையும்” என்றார்.
