சென்னையில் நேற்று நடைபெற்ற ஆன்மீக நூல் வெளியீட்டு விழாவில், தனக்கு ஆத்ம திருப்தி கொடுத்த படங்கள் ராகவேந்திரா மற்றும் பாபா என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
சென்னையில் நேற்று (ஜூலை 22) மாலை நடைபெற்ற ‘யோகதா சத்சங்க’ நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ரஜினியின் பேச்சு பலரையும் ஈர்த்தது. அங்கு தனது சினிமா வாழ்க்கைக்கு இடையேயான ஆன்மீக வாழ்க்கையை குறித்தும், தனக்கு பிடித்த பாபா, ஸ்ரீ ராகவேந்திரா படங்கள் குறித்தும் விரிவாக பேசினார்.
அவர் பேசுகையில், ”நான் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்த படங்கள் ராகவேந்திரா மற்றும் பாபா. ஸ்ரீ ராகவேந்திரா படத்திற்கு பிறகு தான் நிறைய பேருக்கு அவரைப் பற்றித் தெரியும். அதேபோல மகா அவதாரமான பாபாஜியின் சக்தி பற்றியும், அப்படி ஒரு யோகி இருக்கிறார் என்பதும் பலருக்குத் தெரியாது. பாபா படம் வந்த பிறகு தான் நிறைய பேருக்குத் தெரிய வந்தது. பாபா படத்தைப் பார்த்து நூற்றுக்கணக்கான பேர் இமயமலையில் உள்ள ராணிகேட் குகைக்கு போயிருக்கிறார்கள் என்பது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.” என்றார்.

பாபா படத்தில் உருவாக்கப்பட்ட காத்தாடி காட்சியைக் குறித்து விவரித்த அவர், ”பரமஹம்சா யோகானந்தா பற்றி நீங்கள் நிறைய பேர் புத்தகங்களில் படித்திருப்பீர்கள். நிறைய பேருக்கு அவரைப் பற்றித் தெரியாது. சிறுவயதில் இருந்தே அவருக்கு ஒரு சிறப்பு சக்தி இருந்தது. பாபா படத்தில் ஒரு காத்தாடி கைக்கு வரும் காட்சி அவர் குறித்து எழுதிய புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதே.

ஒருநாள் காத்தாடி ஒன்று போய்க்கொண்டிருக்கும் போது யோகானந்தா அவருடைய சகோதரியிடம் அந்த காத்தாடியை என் கைக்கு வரவைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அப்போது அவர் பெயர் முகுந்தா. அதற்கு அவரது சகோதரி அது எப்படி முடியும் எனக் கேட்க, யோகானந்தா அந்த காத்தாடியை அப்படியே பார்க்கும்போது காத்தாடி தானாக அவர் கைகளில் வந்து விழுகிறது. அதைப் பார்த்த அவரின் அக்கா, “அது ஏதோ தற்செயலாக நடந்தது. நீ மறுபடியும் இன்னொரு காத்தாடியை வர வைத்துக் காட்டு பார்க்கலாம்” எனக் கூறுகிறார். இரண்டாவது ஒரு காத்தாடியும் அவரின் கையில் வந்து உட்காரும். அதைத் தான் பாபா படத்தில் வைத்திருந்தேன்.” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா

Comments are closed.