-ஜாசன்
திமுக தலைவர் கலைஞர் வீட்டுக்கு ஒரு முறை ஒரு பத்திரிகை நிருபர் போனார். அப்போது புறப்பட்ட கலைஞரை அவர் சந்திக்க நேர்ந்தது. கலைஞர் அவரது வருகை பற்றி விசாரிக்க நான் ஸ்டாலினை சந்தித்து பேட்டி எடுக்க வந்திருக்கிறேன் என்று சொன்னதும் “அவர் தலையை எதற்கு இப்போது உருட்டுகிறீர்கள்! அவரை அரசியலுக்கு அழைத்து வந்தது நான் இல்லை இந்திரா அம்மையார் தான் அவரை அரசியலுக்கு அழைத்து வந்தார். தேவையில்லாமல் நெருக்கடி நிலையின் போது சிறையில் தள்ளி கொடுமைப்படுத்தப்பட்டார். அதுதான் அவரை அரசியலுக்கு இழுத்து வந்தது “என்று சொல்லிவிட்டு கார் ஏறினார்.
ஸ்டாலின் அரசியல் நுழைவு என்பது நிச்சயம் வாரிசு அரசியல் கணக்கில் வராது. ஆரம்பத்தில் கலைஞர் அவருக்கு பெரிய பொறுப்பு எல்லாம் கொடுத்து கொண்டாடவில்லை. அவரது வளர்ச்சி படிப்படியானது. அதே சமயம் அவருக்கு தரப்பட்ட பொறுப்பை திறம்பட செய்து எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டார் ஸ்டாலின் என்பது தான் உண்மை.
அதனால்தான் கட்சிப் பொறுப்பு எல்லாம் அவருக்கு தேடி வந்தது. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அவர் செயல்பாடு ஆக்கபூர்வமாக இருந்தது. உடல்நிலை சரியில்லாமல் கலைஞர் இருந்தபோது கட்சியை வழிநடத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அவரிடம் தரப்பட்டது என்பது தான் உண்மை.
அதேசமயம் அவர் எல்லோரையும் கலந்தாலோசித்து இறுதியாக முடிவு எடுத்தார். கட்சியில் இருந்த மூத்த தலைவர்கள் துரைமுருகன், நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு ,ஆ. ராசா இப்படி எல்லோரும் ஏற்கனவே அவருக்கு பழக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்களிடம் ஆலோசனை பெறுவதற்கு அவர் எந்த தயக்கமும் இல்லாமல் பேசினார் . எந்த முடிவும் அவர் தன்னிச்சையாக இதுவரை எடுக்கவில்லை என்பதுதான் உண்மை.
அவர் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளுங்கட்சியான அதிமுகவின் அதிகாரபலம் மத்திய அரசின் ஆசி பணம் இவற்றைக் கொண்டு திமுகவை நசுக்க பார்க்கும் என்பது தெரிந்து அதற்கு ஏற்ப துணிச்சலாக அவர் செயல்பாடு இருந்தது. உள்ளாட்சித் தேர்தலை தனக்கான சுயபரிசோதனையாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பார்த்தார். இவருக்கு பயந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த எடப்பாடி யோசித்தார்.
அப்போது உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் என்று வாதாடி உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்க வைத்தார் ஸ்டாலின் .தேர்தலிலும் தங்களது அதிகார தோரணை காட்டி எடப்பாடி ஆட்சி ஜெயிக்க பார்க்கும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ற படி வியூகம் அமைத்து அந்தத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார் ஸ்டாலின்.
சட்டசபை தேர்தல் வெற்றிக்கான முதல் படி அந்த உள்ளாட்சித் தேர்தல். உள்ளாட்சித் தேர்தலின் போது நீங்கள் தில்லுமுல்லு செய்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றாலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி அமைப்புகளை கலைத்து விடுவோம் என்று வெளிப்படையாக பேசினார் ஸ்டாலின். அது அவர் தன்னம்பிக்கையை காட்டியது.
சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து அவர் தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றினார். குறிப்பாக அனைத்து மகளிர்க்கும் இலவச பஸ் பயணம் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை. அரசுப் பள்ளியில் படித்த மாணவ மாணவிகளுக்கு கல்லூரி படிப்பின் போது மாதம் தோறும் ஆயிரம் ரூபாய். பள்ளிகளில் காலை சிற்றுண்டி இப்படி எதிர்க்கட்சிகளே பொறாமைப்படும் அளவுக்கு அவரது நடவடிக்கை இருந்தது.
அதேசமயம் இவற்றையெல்லாம் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்கு வங்கி அரசியலுக்காக செய்யவில்லை என்பதையும் தெளிவுப்படுத்தினார்.
பாராளுமன்றத் தேர்தலுக்கான வியூகம் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு முன்பே தொடங்கிவிட்டார் ஸ்டாலின்.
வட இந்திய தலைவர்களான கெஜ்ரிவால், தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் இவரைத் தேடி வந்து சந்தித்து நெருக்கமானார்கள். தேசிய அரசியலில் ஸ்டாலின் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறார் என்பதுதான் உண்மை. இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்தில் அவரது பேச்சு வெளிப்படையாக இருந்தது.
பாஜகவின் தோல்வி என்பது நமது ஒற்றுமையை பொறுத்தே இருக்கும். நமக்குள் எந்த கருத்து வேறுபாடு இருந்தாலும் அது பாரதிய ஜனதாவுக்கு சாதகமாக விடும் இதை இங்கிருக்கும் தலைவர்கள் உணர வேண்டும் என்று சொன்னார். மூன்றாவது இந்திய கூட்டணி கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஹிந்தியில் பேசியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முற்பட்டபோது நிதிஷ் குமார் அதை தடுத்து திமுக தலைவர்கள் இந்தி கற்றுக் கொள்ள இந்தி தேசிய மொழி என்று சொன்னார் நிதிஷ் குமார்.
எதிர்க்கட்சி ஒற்றுமையைப் பற்றி நாமே பேசிவிட்டு இப்போதிருக்கும் சூழலில் நிதிஷ் குமாருக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது என்று அந்தப் பிரச்சினையை கடந்து போய்விட்டார் மு. க. ஸ்டாலின். அவர் ஆளுமைக்கு இதைவிட சிறந்த உதாரணம் எதுவும் தேவையில்லை.
காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பாக எதிர்க்கட்சி கூட்டணிக்கு ஆளுமை மிக்க தலைவராக ஸ்டாலின் இருப்பதால்தான் பாரதிய ஜனதா அவரைக் குறி வைத்து தாக்க தொடங்கியது. தமிழ்நாட்டில் பிரதமர் மோடி ஸ்டாலினை பற்றி நிறைய அவதூறு பிரச்சாரங்களை செய்தார். வட இந்தியாவில் போய் ஸ்டாலின் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் இதெல்லாம் தமிழ்நாட்டிலும் சரி வட இந்தியாவிலும் பாஜகவுக்கு பெரிய வாக்கு வங்கியாக மாறவில்லை என்பதுதான் இந்த தேர்தல் உதாரணம்.
தொகுதி பங்கீட்டில் கூட கூட்டணி தலைவர்களுக்கு வருத்தம் இருப்பதை தெரிந்து கொண்டு நாம்தான் பெரிய கட்சி நமது தலைமையில் தான் கூட்டணி என்ற ஈகோ எல்லாம் இல்லாமல் அவர்களை அழைத்து எடுத்துச் சொல்லி தொகுதி பங்கீட்டுக்கு சம்மதிக்க வைத்தார் ஸ்டாலின். கூட்டணி வேட்பாளர்கள் எல்லோரும் வாக்குப்பதிவு முடிந்ததும் நேராக சென்று ஸ்டாலினுக்கு நன்றி சொன்னார்கள்.
பாராளுமன்றத் தேர்தல் சம்பந்தமான மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், அமைச்சர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு கொஞ்சம் கடுமையாகத் தான் இருந்தது. எந்தத் தொகுதியில் வாக்கு வித்தியாசம் குறைந்தாலும் மாவட்டச் செயலாளர், மாவட்ட அமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் பதவியில் இருந்து நிச்சயம் நீக்கப்படுவார்கள் இதில் எந்த சமரசமும் கிடையாது என்பதை தெளிவாக சொன்னார்.
பல மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் கலைஞர் காலத்தில் இருந்து திமுகவில் இருக்கிறார்கள். கலைஞர் எப்போதும் நிர்வாகிகளிடம் கடுமையாக நடந்து கொள்ள மாட்டார். அவரது போக்கு மென்மையாகத்தான் இருக்கும்.
ஆனால் பாஜக என்ற கடுமையான எதிரி வலுவான எதிரியை எதையும் செய்யத் துணியும் பாரதிய ஜனதாவை திமுக கூட்டணி எதிர்கொள்ளும் போது ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளிடம் இந்த கடுமையை காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கும் நீங்கள்தான் பொறுப்பு என்பதையும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார் ஸ்டாலின். இதுதான் கூட்டணி கட்சித் தலைவர்களை உருக வைத்தது.
சரியோ தவறோ 2019 தேர்தலில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் சொன்னார். கூட்டணி கட்சிகள் அதை ஏற்றுக் கொள்வார்களா என்பது பற்றி எல்லாம் கவலைப்படாமல் தேசிய அளவில் பாரதிய ஜனதாவுக்கு மாற்று காங்கிரஸ் கட்சி தான் என்பதுதான் ஸ்டாலின் கணக்கு.
இதேபோல் ராகுல் காந்தி சோனியா காந்தி இருவரிடமும் தான் சொல்ல வேண்டியதை சங்கடப்படாமல் சொல்லிவிடுவார் ஸ்டாலின், அந்த அளவுக்கு அவர்கள் உறவு ஆத்மார்த்தமாக இருந்தது.
அவர் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக ,அதிமுக என்ற இரண்டு எதிரிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர் யாரையும் குறைத்து மதிப்பிட்டு ஏமாற தயாராக இல்லை. அதனால் தான் இரண்டு கட்சிகளின் மீதும் அவருடைய பிரச்சாரம் கடுமையாக இருந்தது.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு கிடைத்த இந்த வெற்றி ஸ்டாலின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி என்றுதான் இந்தியா கூட்டணியின் எல்லா தலைவர்களும் அங்கீகரிக்கிறார்கள். தேசிய அரசியலில் ஸ்டாலின் தவிர்க்க முடியாத ஒரு சக்தி.
இந்தத் தேர்தல் பாரதிய ஜனதாவுக்கு ஸ்டாலின் பற்றிய ஒரு புரிதலை நிச்சயம் உணர்த்தியிருக்கும். சென்ற பாராளுமன்றத்திலேயே திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தார்கள்.
இப்போது அது இன்னும் கூடுதலான எதிர்ப்பை பாஜக சந்திக்க வேண்டி இருக்கும். இதுதான் ஸ்டாலினின் தேசிய ஆளுமை .
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோடியின் அகங்காரத்துக்கு மக்கள் கொடுத்த அடி : மம்தா பானர்ஜி
தேர்தல் ரிசல்ட்… கண் கலங்குகிறேன்: எடப்பாடி எமோஷனல்!
பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா ஸ்டாலின்… அவரே சொன்ன பதில்!