பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா ஸ்டாலின்… அவரே சொன்ன பதில்!

பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவீர்களா என்ற செய்தியாளரின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

தமிழ்நாட்டி 40/40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று (ஜூன் 4) மாலை அண்ணா அறிவாலயத்துக்கு வருகைத் தந்தார்.

அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியை ஜனநாயக சக்திகள் அனைவரும் சேர்ந்து உருவாக்கினோம்.

400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி, தங்களுக்கு யாருமே எதிரிகள் இல்லை என்ற கட்டமைப்பை பாஜக ஏற்படுத்தியது.

ஆனால் ஆட்சியமைப்பதற்குதேவையான பெரும்பான்மை இடங்களை கூட பெற முடியாத நிலைக்குபாஜக தள்ளப்பட்டிருக்கிறது. இதுவரைக்குமான செய்திகள் இப்படிதான் வந்துகொண்டிருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கருத்து கணிப்பு என்ற பெயரில் உளவியல் ரீதியான தாக்குதல் பாஜக நடத்தியது.

ஆனால் இந்த தேர்தல் முடிவு என்பது அரசியல் சாசனத்தை மாற்றிவிடலாம், வெறுப்பு பரப்புரைகளால் மக்களை பிளவுப்படத்தலாம் என்று நினைத்த பாஜகவுக்கு எதிராக மக்கள் தீர்ப்பு வந்துள்ளது. இதுதான் எங்கள் கூட்டணியின் வெற்றி.

பாஜகவின் பணபலம், அதிகார துஷ்பரயோகம் என எல்லாவற்றையும் உடைத்தெறிந்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றி அமைந்துள்ளது.

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் காக்க தேவையான நடவடிக்கைகளை திமுக எடுக்கும்.

கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா ஆண்டு இது. மக்களவைத் தேர்தல் வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குகிறேன்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள், தமிழகத்தில் பாஜக காலூன்றும் என்று தேர்தலுக்கு முன்பு வரை சொல்லி வந்தார்கள்… தற்போது தோல்வியை சந்தித்திருக்கிறது என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், “கால் ஊன்றும் போது பதில் சொல்கிறேன். தாமரை எப்படி மலராமல் போனதோ அதேபோன்றுதான் இது.

மோடியின் எதிர்ப்பு அலை பல்வேறு மாநிலங்களில் இருக்கிறது. இது தமிழ்நாட்டில் முழு அளவில் இருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த முடிவு.

மோடி ஒடிசாவில் என்ன பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டு மக்களை கேவலப்படுத்தினார். மக்களை ஏமாற்றுவதற்காக திருக்குறளை பற்றி பேசினார்.

நாளைய தினம் இந்தியா கூட்டணி கட்சிகள் தலைவர்கள் எல்லாம் டெல்லியில் கூட இருக்கிறார்கள். அந்த கூட்டத்துக்கு நானும் செல்கிறேன். அங்கு கூடி பேசி அடுத்தக்கட்ட முடிவெடுப்போம்” என்றார்.

பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படுவீர்களா என்ற கேள்விக்கு, “என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். ஏற்கெனவே பலமுறை இதற்குப் பதில் அளித்துவிட்டேன். அதுபற்றிப் பிறகு பேசலாம்” என்று பதிலளித்தார் மு.க.ஸ்டாலின்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

கேரளாவில் பெரும்பான்மை தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை!

“தெலுங்கு தேசம், ஜேடி(யு) – உடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்வீர்களா?” : ராகுல் பதில்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts