இந்தியா கூட்டணி வென்றது மோடி தோற்றுவிட்டார், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புப்படி, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 27 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
பாஜக 89 இடங்களில் வெற்றிபெற்று, 150 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. 2019 தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் பாஜக கூட்டணி பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மோடியின் அகங்காரத்துக்கு மக்கள் கொடுத்த அடிதான் இந்த தேர்தல் முடிவு என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “பிரதமர் மோடிக்கு பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் மக்களின் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். எனவே அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். 400 இடங்களுக்கு அதிகமாக வெற்றி பெறுவோம் என்று கூறினார். ஆனால் அது நடக்கவில்லை.
தெலுங்கு தேசத்திடமும், நிதிஷ் குமாரிடமும் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களை எனக்கு நன்றாக தெரியும். அவர்கள் இந்தியா கூட்டணியை உடைக்க மாட்டார்கள்” என்று குறிப்பிட்டார்.
இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய அவர், “எனக்கு எதுவும் வேண்டாம். மாநிலங்களுக்கு வரவேண்டிய நிதியை பெற வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை தொடங்க வேண்டும். மத்திய அமைப்புகள் மற்றும் நீதித்துறையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா ஸ்டாலின்… அவரே சொன்ன பதில்!