நல்லாட்சி நாயகர் அடிக்கல் நாட்டிய தமிழ் அறிவு வளாகம்! பண்பாட்டுச் செழுமைக்கு வழி வகுக்கும் ஆட்சியின் மாட்சிமை! 

Published On:

| By Minnambalam Desk

Tamil Knowledge Complex in Chennai

ராஜன் குறை Tamil Knowledge Complex in Chennai

ஓரிரு நாட்களுக்கு முன் சமூக ஊடக செய்தியாகத் தேன் வந்து பாய்ந்தது காதிலினிலே! அது என்னவென்றால் சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தின் புதிய முன்னெடுப்பான தமிழ் அறிவு வளாகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கால்கோள் எடுத்தார் என்ற செய்திதான்! அதனை முதல்வரே சமூக ஊடகங்களில் பகிர்ந்தார் என்பது சிறப்பு! இந்த மையத்திற்கான நிலம் அரசால் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது! அதற்கான நிதி திரட்டுதலுக்கும் அரசு பங்களிப்பு செய்துள்ளது! இது அறிவுலகின் கனவினை நிறைவேற்றும் அரியதொரு செயல் என்பதில் ஐயமில்லை!

உடலுக்கு உண்ணும் உணவு உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஆற்றலைப் பகிர்வது போல நல்லாட்சி என்பது சமூகத்தின் அனைத்து முற்போக்கு செயல்களுக்கும் ஊக்கமளிப்பதுதான். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி பண்பாட்டுப் புலத்தில் பல சிறந்த முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது. அவற்றில் சென்ற வாரம் நிகழ்ந்த பேருவகை தரும் நிகழ்ச்சிதான் தமிழ் அறிவு வளாகத்திற்கு நடப்பட்ட அடிக்கல். அதன் சிறப்பு என்னவென்று தெரிந்துகொள்ள நாம் ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் (Roja Muthiah Research Library) குறித்து அறிந்து கொள்ள வேண்டும். Tamil Knowledge Complex in Chennai

Tamil Knowledge Complex in Chennai

ரோஜா முத்தையா என்ற அறிவுலக தீர்க்கதரிசி! 

ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு சில அபூர்வமான தனி மனிதர்கள் தாங்கள் வாழும் சூழலைக் கடந்த நீண்டகால நோக்கையும், பார்வைகளையும் கொண்டிருப்பார்கள். அவர்களது செயல்பாடுகள் அவர்கள் காலத்தையும் கடந்து சமூகத்தை செழிப்புறச் செய்யும் என்பதை மானுடம் தொடர்ந்து கண்டு வந்துள்ளது. அப்படி ஒரு மனிதர்தான் கோட்டையூர் ரோஜா முத்தையா. Tamil Knowledge Complex in Chennai

சென்னையில் ரோஜா ஆர்ட்ஸ் என்ற பெயரில் பெயர்பலகைகள் வரைந்து வந்த நிறுவனத்தை நடத்தி வந்ததால் முத்தையாவின் பெயர் ரோஜா முத்தையா ஆனது. அவரது அபூர்வ குணம் என்னவென்றால் அவரது வருமானத்தையெல்லாம் அன்றைய சென்னை மூர்மார்க்கெட்டிற்கு வந்து சேரும் பழைய அச்சு நூல்கள், பத்திரிகைகள் பலவற்றையும் வாங்கி சேகரிப்பதுதான். அந்த நூல்கள், சஞ்சிகைகள் எல்லாம் பண்பாட்டுக் கருவூலங்கள் என்ற உணர்வு எப்படியோ அந்த மனிதருக்கு ஏற்பட்டிருந்தது. மளிகைக் கடைகளில் பொட்டலம் கட்டி மறைந்து போயிருக்கக் கூடிய, யார் யார் கையிலோ சிக்கி செல்லரித்துப் போயிருக்கக் கூடிய அந்த நூல்களையும், இதழ்களையும் வாங்கி தன் சொந்த ஊரான கோட்டையூருக்குக் கொண்டு சென்றதுடன் அவற்றை முறையாக பகுத்து அடுக்கியும் வைத்திருந்தார். Tamil Knowledge Complex in Chennai

தன் உறவினர்கள் இல்லங்களில் கேட்டு அவர்களுக்கு வந்த அழைப்பிதழ்கள், கடிதங்களைக் கூட சேகரித்தார் என்றால் அவரது ஆய்வு நோக்கின் விரிவை அறியலாம். பூச்சி அரிக்காமல் அனைத்து சேகரிப்பையும் அவரே பரமாரித்தார். காலப்போக்கில் அவரிடம் இப்படி பல பழைய நூல்கள் இருப்பதை அறிந்த மேல் நாட்டு மற்றும் உள் நாட்டு ஆய்வாளர்கள் அவரைத் தேடிச் செல்லத் துவங்கினார்கள். அவர்கள் ஆய்வுப்புலத்தைக் கேட்டறிந்து, அதற்கேற்ப அவரிடம் இருந்த அரிய நூல்களை வழங்கும் அறிவுலக திசைகாட்டியாக அவர் செயல்பட்டார். அவர் புகழ் கடல் கடந்தும் பரவியது; அதனால்தான் அவர் முதுமையடைந்தபோது அவரது அபூர்வ சேகரிப்பை அவரது குடும்பத்தினர்க்கு கணிசமான நன்கொடை வழங்கி சென்னைக்குக் கொண்டு வந்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு வைக்க வகை செய்தது சிகாகோ பல்கலைகழகம். 

ஒரு அரிய மனிதரின் தனி முயற்சியும் ஒரு அமெரிக்க பல்கலைகழகத்தின் நிதியுதவியும் சென்னைக்குக் கொண்டு வந்த சேர்த்த இந்த பண்பாட்டுக் கருவூலத்தை ரோஜா முத்தையா ஆய்வு நூலக அறக்கட்டளை பாதுகாக்க அரசின் உதவியை நாடியபோதுதான் தரமணியில் அதற்கொரு கட்டடம் வழங்கபட்டது. அதனை அந்த நூலகத்தின் பயன்பாட்டிற்கு நிரந்தரமாக லீசுக்குக் கொடுத்தது கலைஞர் அரசு. நாளடைவில் அந்த ஆய்வு நூலகம் பல சான்றோர்களின் நூல் தொகுப்புகளைப் பெற்று முனைவர் சுந்தர் கணேசனின் நிர்வாகத்தில் பெருவளர்ச்சி அடைந்தது. நூல்கள் மட்டுமன்றி நம் பண்பாட்டு வரலாற்றின் பல்வேறு தடங்களை புலப்படுத்தும் பொருட்களும் சேகரம் ஆயின. 

Tamil Knowledge Complex in Chennai

இந்த நிலையில்தான் அறிஞர் ஐராவதம் மகாதேவன் முன்னெடுப்பில் சிந்து வெளி ஆய்வு மையம் ஒன்றும் அந்த வளாகத்தில் துவங்கபெற்றது. இதனை தலைமையேற்று நடத்தும் ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப (ஓய்வு) அவர்கள் “ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை” என்ற மிகச் சிறந்த ஆய்வு நூலை, தமிழர் அனைவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய நூலை, படைத்தளித்தவர். இன்று கீழடி ஆய்வுகள் வலுப்படுத்தும் பல முக்கிய கருதுகோள்களைக் கொண்ட நூல் இது. Tamil Knowledge Complex in Chennai

அதற்கடுத்து தமிழ் பொது மன்ற ஆய்வுகளுக்கான மையம் ஒன்றும் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் தலைமையில் துவங்கப் பெற்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இவர் ஹிண்டு நாளிதழின் ரீடர்ஸ் எடிட்டராக பல்லாண்டுகள் பணியாற்றவர் என்பது மட்டுமன்றி, கலைஞர் அவர்களுடன் நடத்திய விரிவான நேர்காணலின் அடிப்படையில் அவரது வாழ்க்கை வரலாற்று நூலையும் ஆங்கிலத்தில் படைத்தவர். 

Tamil Knowledge Complex in Chennai

இப்படியாகப் பல ஆற்றல்மிகு அறிஞர் பெருமக்களின் ஒன்றிணைந்த முயற்சியாகத்தான் ரோஜா முத்தையா ஆய்வு நூலக அறக்கட்டளை தமிழ் அறிவு வளாகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஐந்து இலட்சம் அரிய அச்சுப் பண்பாட்டு ஆவணங்களைக் கொண்ட இந்த அறிவு வளாகம் தமிழ் பண்பாட்டின் அறிவுக் கருவூலமாகத் திகழ வல்லது என்பதால்தான் தமிழ்நாடு அரசு இதற்கான நிலத்தை ஒதுக்கித் தந்துள்ளது. அத்துடன் அந்த வளாகத்தை எழுப்பிடுவதற்கான நிதியில் ஒரு பங்கினையும் தந்துள்ளது. மேற்கொண்டு தமிழ் மக்களிடம் திரட்டப்படும் நிதியாதாரத்தில் அந்த வளாகம் சீரும் சிறப்புமாக உருவாகி தமிழ் பண்பாட்டின் மாண்பை எடுத்துரைக்கும். Tamil Knowledge Complex in Chennai

பண்பாட்டு புலங்களில் முதல்வர் ஸ்டாலின் அரசின் முத்தான முன்னெடுப்புகள் Tamil Knowledge Complex in Chennai

பொதுவாகவே நூலக வளர்ச்சியில், புத்தக விற்பனையை ஊக்கப்படுத்துவதில் முதல்வர் ஸ்டாலின் பெரும்பங்களிப்பினை செய்து வருகிறார். அவரை சந்திப்பவர்கள் அவருக்கு சால்வை அணிவிப்பதற்கு பதிலாக நூல்களை வழங்கலாம் என்று கூறினார். அவரும் பல்வேறு இந்திய அரசியல் தலைவர்களைச் சந்திக்கும்போது தமிழ்நாடு, திராவிட இயக்கம் குறித்த நல்ல ஆங்கில நூல்களை பரிசளிப்பார். சென்னை அண்ணா நூலகத்தைப் போலவே நவீன வசதிகளுடன் மதுரையில் கலைஞர் நூலகத்தை அமைத்துத் திறந்துவைத்தார். அடுத்து திருச்சியில் பெருந்தலைவர் காமராஜர் பெயரிலே இதே போன்ற ஒரு பிரம்மாண்ட நூலகம் அமையவுள்ளது. 

நூலகங்கள் நூல்களை கொள்முதல் செய்வது பல்லாண்டுகளாகத் தடைபட்டிருந்தது. 2011 முதல் 2021 வரையிலான பத்தாண்டுகால அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் பெரிதும் பாதிக்கப்பட்ட துறை உண்டென்றால் அது நூலகத் துறைதான். அண்ணா நூலகத்தை மூடிவிடவே திட்டமிட்டார் செல்வி ஜெயலலிதா. அது முடியாதபோது அந்த நூலகம் பெரும் புறக்கணிப்புக்கு ஆளானது. தற்போதைய அரசு அதனை மேம்படுத்தி பொதுமக்கள் பெரிதும் பயன்பெறும் வகையில் நடத்தி வருகிறது.

மாநிலமெங்கும் உள்ள நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் செய்யும் முறையை நெறிப்படுத்தி, வெளிப்படைத்தன்மையுடன் அதற்கான வல்லுனர் குழு அமைத்து சமீபத்தில் கணிசமான நூல்களுக்கான ஆணைகளை பதிப்பகங்களுக்கு வழங்கியுள்ளது அரசு. இது பதிப்புத்துறைக்கு புது ரத்தம் பாய்ச்சியுள்ளது. சென்னை நூலக ஆணைக்குழுவுக்கு கவிஞர் மனுஷ்யபுத்திரனை நியமித்து அவர் கல்லூரி மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம் பெருக சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார். 

அனைத்து மாவட்டத் தலைநகரிலும் புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. அதையொட்டி பல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் உரை நிகழ்த்த அழைக்கப்படுகிறார்கள். பல்வேறு பகுதிகளில் சிறப்பான இலக்கிய விழாக்கள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு தக்க எழுத்தாளர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடத்தப்பட்டன. அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பன்னாட்டு புத்தக விழா சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. தமிழ் இலக்கிய ஆக்கங்களை உலக மொழிகளில் மொழியாக்கம் செய்ய அரசு ஊக்கத் தொகை வழங்குகிறது. அதற்கான ஒப்பந்தங்கள் பன்னாட்டு பதிப்பகங்களுடன் போடப்படுகின்றன. பன்னாட்டு புத்தகக் கண்காட்சியை ஒட்டி ஒரு கருத்தரங்கும் சீரும் சிறப்புமாக நடத்தப்பட்டது. அதன் நிறைவு விழாவில் முதல்வரே பங்கேற்றார். Tamil Knowledge Complex in Chennai

சாகித்ய விருது அல்லது அது போன்ற முக்கிய அரசு விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் வழங்கும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். எழுத்தாளர்கள் வசிக்கும் மாவட்டங்களிலோ அல்லது அவர்கள் விரும்பும் இடங்களிலோ இந்த இல்லங்கள் வழங்கப்படுகின்றன. ஒரு சமூகம் எழுத்தாளர்களை கெளரவிப்பது, அவர்களுக்கான ஊக்கத்தை வழ்ங்குவது எவ்வளவு முக்கியம் என்பதை புலப்படுத்தும் திட்டமாக இது விளங்குகிறது. Tamil Knowledge Complex in Chennai

பொதுவாக இது போன்ற பண்பாட்டுப்புல, அறிவுப்புல முன்னெடுப்புகள் எந்த நாட்டிலுமே வெகுமக்கள் கவனத்தைப் பெறாது. அதனால் வாக்குகளை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படும் கட்சிகளின் ஆட்சியில் இது போன்ற செயல்பாடுகளில் ஆர்வம் காட்டப் படாது. ஆனால் திராவிட முன்னேற்ற கழகம் அறிஞர் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட எழுத்தாளர்களால் உருவான கட்சி. மக்களவைக்கு திருமதி கனிமொழி, திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய இரு கவிஞர்களையும், மாநிலங்களவைக்கு கவிஞர், எழுத்தாளர் திருமதி சல்மா அவர்களையும் அனுப்பியுள்ள ஒரே கட்சி இந்தியாவில் திராவிட முன்னேற்ற கழகமாகத்தான் இருக்கும். Tamil Knowledge Complex in Chennai

இத்தகைய பின்புலத்தில்தான் தமிழ்நாட்டு வளர்ச்சியில் பண்பாடு, அறிவுத்துறைகளின் முக்கியத்துவம் எத்தகையது என்பதைக் கருத்தில் கொண்டு முதல்வர் ஸ்டாலின் அரசு சிறப்பான முன்னெடுப்புகளை செய்து வருகிறது. இது தேர்தலை மனதில் வைத்து செய்யப்படுவதல்ல. வெகுமக்களுக்கு இது கவனத்தில் வராது என்பது ஒரு புறமிருக்க, எழுத்தாளர்களிலேயே ஒரு சாரார் இந்த விழாவுக்கு என்னை அழைக்கவில்லை, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கக் கோரவில்லை, அவரை ஏன் அழைத்தார்கள் என்று அதிகம் குறைதான் சொல்வார்களே தவிர, இத்தகைய முன்னெடுப்புகளின் சமூக முக்கியத்துவம் கருதி பாராட்டமாட்டார்கள். அதனால் உடனடியான பலன் கருதாமல்தான் அரசு இது போன்ற பண்பாட்டு முன்னெடுப்புகளை நடத்த வேண்டும். இது நீண்டகாலத்துப் பயிர். இன்றைய முயற்சிக்கு இருபதாண்டுகளுக்குப் பின் பலன் கிடைக்கும், புதிய தலைமுறை அறிவுசார் சமூகமாக வளரும். Tamil Knowledge Complex in Chennai

Tamil Knowledge Complex in Chennai

இத்துடன் பள்ளிக்கல்வித்துறையில் அரசு செய்துவரும் முன்னெடுப்புகள், நவீன வசதிகள் கொண்ட வகுப்பறைகள்,  நான் முதல்வன் திட்டம் என்ற மாணவர் திறனை அடையாளம் கண்டு ஊக்கமளிக்கும் அற்புதமான திட்டம், பரவலாக துவங்கப்பட்டுள்ள போட்டித் தேர்வுகளுக்குப் பயில்பவர்களுக்கான படிப்பறைகள் ஆகியவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால், கல்வி, பண்பாடு, அறிவுத்துறைகளின் வளர்ச்சியில் பெருவீச்சினை ஏற்படுத்த வேண்டும் என்ற அரசின் விருப்புறுதியை கவனிக்கலாம்.

அதன் அடித்தளமாக விளங்கக் கூடிய திட்டம்தான் காலை உணவுத் திட்டம். தேர்தல் வாக்குறுதியிலேயே இடம் பெறாத இந்த மகத்தான திட்டத்தை “சொன்னதைச் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்” என்று நிகழ்த்திக் காட்டியுள்ளார் முதல்வர். 

இவ்வாறு பரந்துபட்ட பண்பாட்டு, அறிவுத்துறை வளர்ச்சியில், சுருங்கச் சொன்னால் மனித வள மேம்பாட்டில், காட்டும் அக்கறையின் முத்தாய்ப்பான அம்சமாகத்தான் ரோஜா முத்தையா நூலக அறக்கட்டளையின் தமிழ் அறிவு வளாகத்தின் கால்கோள் நிகழ்வையும் காண வேண்டும். தமிழ் பண்பாட்டின் சின்னமாக புதுப்பிக்கப்பட்டு மிளிரும் வள்ளுவர் கோட்டம் போன்றே, சென்னையின் மற்றொரு அடையாளமாக தமிழ் அறிவு வளாகம் மிளிரும் நாள் தொலைவில் இல்லை. இந்த கட்டடத்திற்கான முழு நிதியைத் திரட்டும் முயற்சியில் அறக்கட்டளை வெற்றிபெற்று, விரைவில் கட்டி முடிக்கப்பட்ட வளாகத்தையும் முதல்வரே திறந்து வைப்பார் என எதிர்பார்க்கலாம். இந்த முன்னெடுப்புக்கு வழங்கிய ஆதரவுக்காக தமிழ் அறிவுலகம் முதல்வர் ஸ்டாலினுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும். Tamil Knowledge Complex in Chennai

கட்டுரையாளர் குறிப்பு:  

Rajan Kurai Tamil Knowledge Complex in Chennai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share