தமிழ்நாட்டில் சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் இன்று(செப்டம்பர் 17) நடைபெற்ற தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாமில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை, லட்சக்கணக்கான மனவளர்ச்சி குன்றியவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைந்த மிக சிறந்த மருத்துவமனையாகும். இது 47 ஏக்கர் பரப்பளவில் பசுமையான சூழலில் அமைந்துள்ளது. இதில் 20 ஏக்கர் நிலங்கள் காலியாக உள்ளது. இந்த இடங்களில் தேவையான கட்டடங்களை கட்டி எதிர்காலத்தில் இந்தியாவின் மிகச்சிறந்த மனநல மருத்துவத்திற்கான ஆராய்ச்சிக் கூடமாகவும், மருத்துவமனையாகவும் மாற்றுவதற்கான முயற்சிகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த மருத்துவமனையில் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார். அதில் நூற்றுக்கணக்கானவர்கள் குணமடைந்து திரும்பி செல்ல இடமில்லாமல் இருக்கின்றனர். இவர்கள் குடும்பத்தாரால் புறம் தள்ளப்பட்டவர்கள்.இவர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான உதவிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் என்பதால் அதுகுறித்து பேச வேண்டும். தமிழ்நாட்டில் தற்கொலைகளினால் ஆண்டு ஒன்றுக்கு 15-16 ஆயிரம் வரையிலான மரணங்கள் ஏற்படுகின்றன. விபத்துக்களினால் 11-12 ஆயிரம் வரை மரணங்கள் ஏற்படுகின்றன. தற்கொலை மரணங்கள்தான் அதிகளவில் உள்ளது. அதில் 10-15 சதவிகிதத்தினர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் எல்லாம் சாணி பவுடர், பால் டாயில், எலி மருந்து ஆகியவற்றை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். அண்மையில் திருமங்கலத்திலுள்ள மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது, அங்கே மூன்று பேர் சாணி பவுடரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து சிகிச்சை பெற்று வந்ததை பார்த்தேன்.
முந்தைய காலத்தில் வீட்டிற்கு முன்பு சாணி மொழுகுவது என்பது சுகாதாரமான மற்றும் விஷ கிருமிகளை வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்கும் ஒன்றாக இருந்து வந்தது. தற்போது வணிகரீதியில் சாணிபவுடர் விஷமாக மாறியுள்ளது. அதனால் சாணி பவுடர் தயாரிக்கிற நிறுவனங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மூலம் விரைவில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் தற்கொலைக்கு இன்னும் சில காரணிகளாக இருக்கக் கூடிய பால் டாயில், எலி மருந்து போன்றவற்றை கடைகளில் விற்பவர்கள் அதை ஒரு லாக்கரில் வைத்து பாதுகாப்பான இடங்களில் வைத்து விற்பனை செய்ய வேண்டும். வெளிப்படையாய் தெரியும்படி விற்பனை செய்யக் கூடாது என்ற அறிவுறுத்தலையும்,
அதை வாங்க வருபவர்கள் தனி ஒருவராக வந்தால் தரக் கூடாது என்றும், இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து வந்து வாங்கினால் மட்டுமே எலி மருந்து, பால் டாயில் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தக் கூடிய அரசாணைகளை துறையின் அலுவலர்கள் மூலம் அளிக்க இருக்கிறோம். அதோடு தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் தற்கொலை மரணங்களை தடுக்க முடியும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.
**-வினிதா**
