தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று (ஜூன் 18) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இரண்டாவது நாளாக இன்று அவை கூடியதும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, மேகதாது அணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார். இதற்கு திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், தேமுதிக, சிபிஎம், சிபிஐ, கொமதேக, மமக என அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து கூட்டத்தொடர் நாள் முழுவதும் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் திமுக உறுப்பினர்களுக்கும், தவெக உறுப்பினர்களுக்கும் இடையே காரசார விவாதங்கள் நடந்து வருகின்றன.
அப்போது திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின், சிறுமிகள், பெண்கள் என பலர் பாதிக்கப்பட்டாலும், என்ன நடந்தாலும், வானமே இடிந்து விழுந்தாலும் நான் வாயை திறக்கமாட்டேன் என்று சரித்திர புரட்சியை ஏற்படுத்தி வருகிறார் முதலவ்ர் விஜய் என்று விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் ஆர்ஜூனா, என்ன பேச வேண்டும். எப்போது பேச வேண்டும். எங்கே பேச வேண்டும் என்பதெல்லாம் முதல்வருக்கு தெரியும். எப்போது பேச வேண்டுமோ, அப்போது பேசுவார். கொளத்தூரில் அவர் பேசியதால் முடிவு எப்படி வந்தது என அனைவருக்கும் தெரியும் என்று பொருள்படும்படி பேசினார். அதுபோன்று தூத்துக்குடி விளாத்திக்குளம் பள்ளி மாணவி வழக்கில் திமுக என்ன நடவடிக்கை எடுத்தது என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின், ”விளாத்திகுளம் வழக்கில் 25 மணி நேரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டார்” என்றார்.
அதோடு திமுக எம்.எல்.ஏ.க்கள் எழுந்து கொளத்தூரை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? என்று ஆவேசமாக குரல் எழுப்பினர்.
இதையடுத்து சபாநாயகர் தலையிட்டு சமாதனப்படுத்தினார். அவை முன்னவரான அமைச்சர் செங்கோட்டையனும் சமாதான முயற்சியில் ஈடுபட்டார்.
தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் எழுந்து, ’முதல்வர் பேசவில்லை என்று நீங்கள் சொல்லவேண்டாம். ஏற்கனவே அவர் பிரச்சாரம் செய்ததால் தான், நீங்கள் செய்த முறைகேடுகளை தெரிந்துகொண்டு மக்கள் சரியான முடிவை கொடுத்திருக்கிறார்கள்” என்றார்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை குறித்து பேசிய திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின், போலீசார் ஒரு ஷிப்டில் ஒரு உடையும், இன்னொரு ஷிப்டில் இன்னொரு உடையும் அணிந்து செல்கிறார்கள். ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். அமைதியான மாநிலமாக இருந்த தமிழ்நாடு மோசமான மாநிலமாக மாறிவிடும் போல் இருக்கிறது என்று கூற,
இதற்கு அமைச்சர் ராஜ்மோகன், ’சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல்கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்படை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்டுவோம்’ என்று பதிலளித்தார்.
