மேட்டுப்பாளையம் அருகே, நிறுத்தப்பட்டிருந்த காரில் விளையாடிய 9 வயது சிறுவன், கதவுகள் பூட்டிக்கொண்டதால் வெளியேற முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்துள்ள பெட்டிக்குட்டை கருப்பராயன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வேலுமணி. இவரது 9 வயது மகன் முகுந்தன். வேலுமணியின் வீட்டிற்கு முன்பாக, அப்பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் விடுமுறை நாட்களில் தனது காரை நிறுத்துவது வழக்கம். அந்த வகையில் நேற்றும் அவர் காரை வழக்கம்போல் நிறுத்தியுள்ளார்.
காரின் சாவி அந்த வீட்டிலேயே இருந்த நிலையில், நேற்று பகலில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி சிறுவன் முகுந்தன் சாவியை எடுத்துக்கொண்டு காருக்குள் ஏறி விளையாடியுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக காரின் கதவுகள் பூட்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் காரை விட்டு வெளியேற முடியாமல் சிறுவன் உள்ளேயே சிக்கிக்கொண்டான்.
நீண்ட நேரம் காரினுள்ளேயே இருந்ததால், காற்று ஓட்டமின்றி மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுவன் மயக்கமடைந்துள்ளான். நேற்று மாலையில் மணிவண்ணன் காரை எடுக்க வந்தபோதுதான், சிறுவன் மயங்கிய நிலையில் காருக்குள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து சிறுமுகை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
