தமிழக சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், வீரன் சுந்தரலிங்கத்தை ’முதல் மனித வெடிகுண்டு’ என குறிப்பிட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; தமிழர் வரலாற்றில் வீரன் சுந்தரலிங்கத்துக்கு முன்பு குயிலிதான் ‘முதல் மனித வெடிகுண்டு’ என எழுத்தாளர் ஸ்ரீராம் திருவரங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு எழுத்தாளர்-இயக்குநர்- வரலாற்று ஆய்வாளரான ஸ்ரீராம் திருவரங்கம் எழுதிய கடிதம்: கடந்த 7.8.2026 அன்று நடைபெற்ற சட்டப்பேரவை நிகழ்வொன்றில், உறுப்பினர் மார்க்கண்டேயன் , தமிழர் வரலாற்றில் “முதல் மனித வெடிகுண்டு” குறித்து பேசிய தகவல் செய்தித்தாளில் வெளியிடப்பட்டு, எனது எளிய கவனத்திற்கு வந்தது.
இத்தகவல், வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய ஒன்றாகும் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர் வரலாற்றில், 1780ஆம் ஆண்டில் வீரத்தளபதி குயிலி, வேலுநாச்சியாரின் படைத்தளபதியாக இருந்து, தன்னையே வெடிகுண்டாக அர்ப்பணித்து, ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கை அழித்த வீரத்தியாகத்தை நிகழ்த்தியவர் என குயிலியின் வரலாறு குறித்து வெளியான பல்வேறு ஆய்வுகளும் நூல்களும் பதிவு செய்துள்ளன.
வரலாற்று குயிலி குறித்தான ஆய்வுப் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டும், 2004 முதலான எனது ஆய்வின் பாற்பட்டும், 2010ல் அரங்கேறி இன்று தமிழ் – ஆங்கிலம்- ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகமெலாம் மேடையேறி வரும் எனது “வேலுநாச்சியார்” படைப்பின் நீட்சியாகவும், கடந்த 2018ஆம் ஆண்டில் “வீரத்தளபதி குயிலி” என்ற பெயரில் ஒரு தெருக்கூத்து இலக்கிய நாடகத்தை அடியேன் படைத்துள்ளேன்.

எனது அந்தத் தெருக்கூத்து இலக்கியப் படைப்பு நூலாகவும் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. மேலும், அது சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கோபாலன் இரவீந்திரன் அவர்களின் முன்னெடுப்பில் ‘முற்றம்’ குழுவினரால் திருவள்ளூர் தெருக்கூத்து ஆசிரியர் ஞா. ரூபன் அவர்களது குழுவினரால் 21.12.2018 அரங்கேற்றமாக நிகழ்த்தப்பட்டுள்ளது.
வரலாற்று நாயகி குயிலி குறித்தான எனது பேட்டிகள் பல்வேறு சேனல்களில் வெளியாகி, உலகளாவிய தமிழர்களின் பரவலான ஆமோதிப்பையும் பெற்றிருக்கின்றன.
இந்த நிலையில், மாண்புமிகு சட்டப்பேரவையின் அதிகாரப்பூர்வ குறிப்புகளில் இத்தகைய வரலாற்றுச் செய்திகள் இடம்பெற்றுவிட்டால், அது எதிர்காலத்தில் தமிழர் வரலாற்றைப் பற்றிய தேவையற்ற வரலாற்றுத் திரிபுகளுக்கும் தவறான புரிதல்களுக்கும் வழிவகுத்துவிடக் கூடும் என்ற ஆழ்ந்த கவலை எனக்கு உள்ளது.

குறிப்பாக, குயிலியின் வீரத்தியாகம் 1780ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாக வரலாற்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஆனால், வீரன் சுந்தரலிங்கத்தின் வீரத்தியாகம் 1799ஆம் ஆண்டைச் சேர்ந்தது. அதாவது, சுந்தரலிங்கத்தின் வீரத் தியாகத்திற்கு ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பே குயிலி இந்த வீரத்தியாகத்தைச் செய்துள்ளார் என்பதை நாம் கண்கூடாகக் காண முடிகிறது.
ஆகையால், மேற்கண்ட தகவலை உரிய வரலாற்று ஆதாரங்களுடன் மறுபரிசீலனை செய்து, அது தவறானதாக இருப்பின் சட்டப்பேரவையின் அதிகாரப்பூர்வ குறிப்பிலிருந்து நீக்கி அல்லது உரிய திருத்தம் செய்து, தமிழர் வரலாற்றின் உண்மைத்தன்மை காக்கப்படுமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு பெண்ணின் வீரத் தியாக வரலாற்றை முன்னிறுத்துவதும் – “முதல் மனித வெடிகுண்டு” என்னும் பெருமையை குயிலிக்கு அளித்து நிலைநிறுத்துவதும் – அதன்மூலம், வருங்காலப் பெண் குழந்தைகளின் உள்ளத்திற்கு வலுசேர்க்க வேண்டியதும் நம் கடமையாகும். இவ்வாறு ஸ்ரீராம் திருவரங்கம் தெரிவித்துள்ளார்.
