பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்த மோசடி வழக்கில் மர்ம சம்பவங்கள் நிகழ்வதால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கை: பழனி முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் திரு.அன்வர்தீன் உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல, இவ்வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உடல்நல குறைவால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
பழனி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பதிவு செய்த அன்றைய தினமே, கோயிலுக்கு சொந்தமான மற்றொரு நிலம் தனிநபருக்கு பத்திரப்பதிவு, மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிலம் முறைகேடாக பதிவு செய்த வழக்கில் ஒருவர் கைது என அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வரும் சூழலில், பழனி திருக்கோவில் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட முக்கிய நபர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஏற்கனவே, தவெக ஆட்சியமைந்த பின் அடுத்தடுத்து காவல் மரணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கோயில் நிலம் பத்திரப்பதிவு தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நபர் சிபிசிஐடி காவல் விசாரணையை முடித்து சிறை திரும்பிய நிலையில் திடீரென உயிரிழந்திருப்பதன் பின்னணியில், காவல்துறையினர் தாக்கியதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாரா? அல்லது ஏற்கனவே அவருக்கு இருந்த உடல் உபாதைகளால் உயிரிழந்தாரா? உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறது.
எனவே, தமிழகத்தில் திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை
பழனியில் ₹100 கோடி மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வர்தீன் என்பவர் நெஞ்சுவலியின் காரணமாக திடீரென உயிரிழந்துவிட்டதாகவும், சார்பதிவாளர் மணிகண்டன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியையும் பல்வேறு சந்தேகங்களும் எழுகின்றன.
முழு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படும் பட்சத்தில், தவெக அரசின் மிகப்பெரும் ஊழலை அம்பலப்படுத்திய இவ்வழக்கின் குற்றவாளிக்கு மட்டும் எப்படி திடீரென நெஞ்சுவலி வரும்? அதிலும் இவ்வழக்கின் முக்கிய சாட்சியங்களாக கருதப்படும் இருவருக்கும் ஒரே நேரத்தில் எப்படி உடல்நலக்குறைவு ஏற்படும்?
முதல்வர் விஜய் பொறுப்பேற்றதில் இருந்து, காவல் நிலையங்களிலும் சிறைகளிலும் இருக்கும் குற்றவாளிகள் எல்லாம் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வரும் நிலையில், இந்த மரணத்தை இயற்கையான நிகழ்வு என்று கடந்து போக முடியவில்லை.
எனவே, அன்வர்தீன் உயிரிழந்தபோது பணியில் இருந்த அனைத்து சிறைக் காவல் அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும்! இம்மரணத்தின் உண்மையான பின்னணி குறித்த முறையான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்! மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சார்பதிவாளர் மணிகண்டனுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கி, அவரை அரசு பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்! இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
