பழனியில் ரூ100 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் திடீரென உயிரிழந்துள்ளார். இதேபோல இந்த மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கொடைக்கானல் சார் பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன், நெஞ்சுவலியால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பழனியில் ரூ100 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை மோசடியாக பத்திரப் பதிவு செய்த சம்பவம் தமிழ்நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கில் வழக்கறிஞர் அன்வர்தீன், முருகதாஸ், சேதுபதி, ஜஸ்டின் மணிகண்டன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது ஜாமீன் மனுக்களை திண்டுக்கல் நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது. இவ்வழக்கில் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த இடைத்தரகர் ஜெயபிரகாஷ் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று இரவு சரண் அடைந்தார்.

இந்த நிலையில் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன், திடீரென உயிரிழந்தார். இது தொடர்பாக சிறைத் துறை அதிகாரிகள் கூறுகையில், அன்வர்தீனுக்கு ஏற்கனவே பல உடல்நல பாதிப்புகள் இருந்தன; மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்கின்றனர்.

இதனிடையே இவ்வழக்கில் பத்திரப் பதிவு செய்த கொடைக்கானல் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஜஸ்டின் மணிகண்டன் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
