விவாகரத்து மனுவை முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா வாபஸ் பெற்றிருக்கும் நிலையில், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தேவைப்பட்டால் எதிர்காலத்தில் புதிய மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
1998ஆம் ஆண்டு முதல்வர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சங்கீதா லண்டனில் வசித்து வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனது கணவர் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், அது தனக்கு மன அழுத்தத்தைத் தருவதாகவும், சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவு 27(1)(a),(b),(d)-இன் கீழ் திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த மனு ஏப்ரல் 20, ஜூன் 15 ஆகிய இரு தேதிகளில் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் நேற்று (ஆகஸ்ட் 7) விசாரணைக்கு வந்தது.
அப்போது லண்டனிலிருந்து சங்கீதா காணொளி காட்சி மூலம் ஆஜரானார்.
நேற்று சட்டப்பேரவை நடந்ததால் முதல்வர் விஜய் ஆஜராகவில்லை. அவரது சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்த நிலையில் மூடப்பட்ட அறையில் விசாரணை நடந்ததாகத் தகவல்கள் வருகின்றன.
இந்தநிலையில் நீதிபதி சுஜாதா சுமார் 30 நிமிடம் வரை சங்கீதாவிடம் விசாரணை செய்திருக்கிறார். இதன் பின் நேற்றைய தினமே மீண்டும் மீண்டும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டு விசாரணைக்கு வந்தது..
.
இறுதியாக இந்த மனுவை வாபஸ் பெறுவதாக சங்கீதா நீதிபதியிடம் தெரிவித்தார். இதற்கு முதல்வர் விஜய் தரப்பிலிருந்து எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் நீதிபதி சுஜாதா, மனுவை வாபஸ் பெற சங்கீதாவுக்கு அனுமதி வழங்கி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
தேவைப்பட்டால் எதிர்காலத்தில் ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்யலாம் என்றும் சங்கீதாவிடம் தெரிவித்தார்.
வழக்குத் திரும்பப் பெறப்பட்டதால், சட்டப்படி இவர்களது திருமணம் தொடர்கிறது.
தற்போது ஒருதரப்பு மனு தான் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது .
எதிர்காலத்தில் இருவரும் சேர்ந்து வாழலாம் அல்லது இருவரும் பேசி பரஸ்பரமாக விவகாரத்து மனு தாக்கல் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
