தமிழக கோயில்களில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது, புகைப்படம் எடுக்கக்கூடாது என்ற உத்தரவு பெரும்பாலான கோயில்களில் ஏற்கனவே உள்ளது.
ஆனால் உத்தரவை மீறி கோயிலுக்குள் ரீல்ஸ் எடுப்பது தொடர்ந்து வருகிறது.
இந்தசூழலில் அறநிலையத் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதில்,
அறிவிப்பு பலகைகள் அமைத்தல்
திருக்கோயில் வளாகத்திற்குள் கைப்பேசி பயன்பாட்டிற்கு தடை அடங்கிய அறிவிப்பு பலகையினை, திருக்கோயில் நுழைவு வாயில் மற்றும் வெளியே பக்தர்கள் நன்கு அறியும் வகையில் வைக்கப்பட வேண்டும்.
ஒலிபெருக்கி மூலமும் இவ்விவரத்தினை அறிவித்திட வேண்டும்.
கைப்பேசி பாதுகாப்பகங்கள் அமைத்தல்
பக்தர்கள் திருக்கோயிலுக்குள் நுழையும் முன், தங்களின் கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்திடும் பொருட்டு கைப்பேசி பாதுகாப்பு பெட்டக வசதியினை திருக்கோயில் நிருவாகம் ஏற்படுத்துதல் வேண்டும். இம்மையங்கள் இயன்றவரையில் திருக்கோயில் நுழைவு வாயில் அல்லது காலணி பாதுகாப்பு மையத்திற்கு அருகிலேயே அமைக்கப்படுதல் வேண்டும்.
கட்டணம் மற்றும் இரசீது வழங்குதல்
கைப்பேசிகளை பெற்று பாதுகாப்பதற்கான கட்டணமாக ஒரு கைப்பேசிக்கு ரூ.5/- என்ற சீரான தொகை வசூலிக்கப்பட வேண்டும். இதற்கான இரசீது ITMS மூலம் வழங்கப்பட வேண்டும்.
01.09.2026 முதல் அனைத்து முதுநிலைத் திருக்கோயில்களிலும் பக்தர்கள் கைப்பேசியினை (Mobile Phone) கோயிலுக்குள் கொண்டு செல்லும் நடைமுறை முழுமையான தடைசெய்யப்பட வேண்டும்.
பணியாளர்கள் நியமனம்
பக்தர்களிடமிருந்து கைப்பேசியினை பெற்று பாதுகாப்பாக வைத்து, பக்தர்களிடம் மீள ஒப்படைக்கும் பொருட்டு தேவையான பணியாளர்கள் / Volunteers நியமிக்கப்படுதல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபலங்களுக்கும் கட்டுப்பாடு…
திரைத்துறை பிரபலங்கள் அல்லது முக்கியப் பிரமுகர்கள் கோயிலுக்குத் தரிசனம் செய்ய வரவுள்ளது தெரியவந்தால், குறைந்தது ஒரு நாளுக்கு முன்பாகவே அது குறித்துத் தகவலைத் தெரிவிக்க வேண்டும்.
உடனடி வருகையாக இருந்தால், விவரம் தெரிந்தவுடனேயே அவர்கள் வருகை தரும் திருக்கோயில், வரவிருக்கும் நேரம், மற்றும் அவர்களுடன் உடன் வரும் நபர்களின் எண்ணிக்கை போன்ற முழுமையான தகவல்களை ஆணையர் அலுவலகத்திற்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
புகைப்படங்கள் மற்றும் காணொளிப் பதிவுகளுக்குத் தடை
முக்கிய நபர்களின் வருகையின் போது, கோயில் வளாகத்திற்குள் புகைப்படம் எடுப்பதற்கோ (Photography) அல்லது காணொளி பதிவு செய்வதற்கோ (Video Recording) எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது.
கோயிலின் புனிதத்தன்மையையும் தனிப்பட்ட பக்தர்களின் அமைதியையும் காக்கும் வகையில் இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
