வேளச்சேரி வழி – தாம்பரம்  டூ கிண்டி… இனி குளு குளு பயணம்!

Published On:

| By Kavi

தாம்பரம் டூ கிண்டி வரை வேளச்சேரி வழியில் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க  விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும் என்று பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவித்தார். Metro rail service from Tambaram to Guindy

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 14) சென்னையில் மெட்ரோ சேவை திட்டங்களை விரிவுப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். 

“தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ இரயில் திட்டங்களிலேயே மிகப்பெரிய திட்டமாக 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 119 கி.மீ. தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இவ்வழித்தடங்களில், பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான உயர் வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.

கோவை மாநகரில் அவினாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில் 10,740 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்,

மதுரை மாநகரில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை இணைக்கும் விதமாக 11,368 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கென தயாரிக்கப்பட்ட  விரிவான திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் மூலதனப் பங்களிப்பு பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  மத்திய அரசு அனுமதி வழங்கியவுடன் இதற்கான பணிகள் தொடங்கும். 

தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரை 21 கி.மீ. தூரத்திற்கும். கலங்கரை விலக்கத்திலிருந்து உயர் நீதிமன்றம் வரை 6 கி.மீ. தூரத்திற்கும் மெட்ரோ ரெயில் வழித்தடம் நீட்டிப்பு செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும்.

புதுடெல்லி – மீரட் நகரங்களுக்கிடையே அதிவேக ரயில் போக்குவரத்தை உருவாக்கி இயக்கப்படுவதைப் போன்று, மண்டல விரைவுப் போக்குவரத்தை (Regional Rapid Transit System-RRTS) தமிழ்நாட்டிலும் ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் (Semi High Speed Railway) அமைப்பினை பின்வரும் வழித்தடங்களில் உருவாக்கிட சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்

மாமல்லபுரம். உதகை, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் அப்பகுதிகளில் நிலவும் நுண்ணிய சுற்றுச்சூழல் தன்மையை கருத்தில் கொண்டும் ரோப்வே (Ropeway) உயர் போக்குவரத்து அமைப்பினை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும்” என்று அறிவித்தார் தங்கம் தென்னரசு.  Metro rail service from Tambaram to Guindy

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share