மேலூர் அருகே நேருக்கு நேர் கார் மோதி கோர விபத்து – 5 பேர் பலி

Published On:

| By Pandeeswari Gurusamy

Accident

மேலூர் அருகே மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் மற்றும் இரு கார்கள் மோதி நடந்த கோர விபத்தில், 3 வயது பெண் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி நான்குவழிச் சாலை மேம்பாலப் பகுதியில், சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி ஒரு கார் சென்றுகொண்டிருந்தது. அதில் 3 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை பயணம் செய்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பைத் தாண்டி மறுபுறத்திற்குச் சென்றது. அதேசமயம் எதிரே மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த மற்றொரு கார் மீது தடுப்பைத் தாண்டிய கார் பயங்கரமாக மோதியது.

ADVERTISEMENT

இந்த விபத்தில் சென்னையில் இருந்து சென்ற கார் நொறுங்கியது. அதில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம், மேலும் ஒரு ஆண், ராஜகுமாரி, ரஞ்சனா ஆகிய 2 பெண்கள் மற்றும் 3 வயது பெண் குழந்தையான பிரணிகா உட்பட மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், காரில் வந்த ஒரு ஆண் மற்றும் எதிரே வந்த காரில் இருந்த ஒரு ஆண் என இருவர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து மேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share