பொள்ளாச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி – பழனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லாம்பள்ளி பிரிவு அருகே சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது அதிவேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்து, அதில் பயணம் செய்திருந்த இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என மொத்தம் ஐந்து பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த கோமங்கலம் காவல் நிலைய போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்களில் நான்கு பேர் கோவை மாவட்டம் மதுக்கரை அருகே குரும்பபாளையத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் கனகராஜ், அவரது மனைவி நர்மதா மற்றும் அவர்களது இரு மகள்கள் ஆர்த்தி, பூரணி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த ஐந்தாவது நபர் காரை ஓட்டி வந்த ஓட்டுநரா அல்லது வேறு யாரா என்பது குறித்து கோமங்கலம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விபத்திற்கான காரணம் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
