மதிமுக நிர்வாகக் குழு… 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்… முழு விவரம் இதோ!

Published On:

| By Minnambalam

மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுன ராஜ் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 20) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் செந்திலதிபன், துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகிய துரை வைகோ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

தமிழக ஆளுநர் பதவியில் இருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும், ஜாட் படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 1

இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக திகழும் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஆளுமைத் திறனோடு வழிநடத்தும் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதுடன் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டுமென்று மதிமுக நிர்வாக குழு விழைகிறது.

ADVERTISEMENT

தீர்மானம் 2

இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் செல்ல வேண்டிய திசை வழியை தீர்மானிக்கக் கூடிய வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுய ஆட்சிக் கோட்பாட்டின் அவசிய தேவையை வலியுறுத்தி உரையாற்றி உயர்நிலைக் குழுவையும் அமைத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நிர்வாக குழு பாராட்டுகளை நன்றியை உரித்தாக்குகிறது.

தீர்மானம் 3

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதையும், ஆளுநர் பொறுப்பை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தி வருவதையும் உச்ச நீதிமன்றம் தெளிவாக உணர்ந்து கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT

ஆளுநர் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார். எனவே, அவரை குடியரசுத் தலைவர் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று மதிமுக நிர்வாக குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4

தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்ஃபு திருத்தச் சட்டம் நாட்டின் பன்முகத்தன்மைக்கும் அரசியல் சட்டத்தின் தனி மனித உரிமைக்கும் சவால் விடுகிறது. இச்சட்டத்தை எதிர்த்து ஜனநாயக வழியில் போராடி முறியடிக்க வேண்டும் என்று மதிமுக நிர்வாக குழு அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 5

இலங்கை இராணுவத்தோடு பிரதமர் நரேந்திர மோடி இராணுவ ஒப்பந்தம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமின்றி, தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் கொடும் துரோகம் ஆகும்.

நாள்தோறும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் குறித்து இந்தியப் பிரதமர் இலங்கை அதிபரிடம் கண்டனத்தை பதிவு செய்யாததை இக்கூட்டம் கண்டிக்கிறது.

தீர்மானம் 6

பொதுமக்களிடமிருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்குத் தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் என்று அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை மதிமுக நிர்வாகக் குழு வரவேற்று, இதனைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 7

தெலுங்கு பட இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் சன்னி தியோல் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி ஜாட் என்ற இந்தி திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படத்தில், ஈழத் தமிழர் விடுதலை போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் ஜாட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 8

மதிமுகவின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழாவை மே 6-ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து இரண்டு வார காலத்திற்கு கட்சி தோழர்களின் இல்லங்களில் கொடியேற்றுவது, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்குவது, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நல்குதல், ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு அளித்தல் மற்றும் தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தி தமிழ்நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவது என்று நிர்வாகக் குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 9

தமிழ்நாடு ஆளுநரை உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாக கண்டித்திருக்கின்ற நிலையில், அவர் ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும், வக்ஃப் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் மண்டல வாரியாக மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். mdmk executive committee meeting

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share