வடஇந்தியாவை மிரட்டும் மிக பிரம்மாண்ட மேக கூட்டம்- அதி தீவிர கனமழை எச்சரிக்கை!

Published On:

| By Mathi

North India- Map

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வரும் நிலையில், வட மற்றும் மத்திய இந்தியாவின் பெரும் பகுதியை பிரம்மாண்ட மேகக்கூட்டங்கள் சூழ்ந்துள்ளன. இதன் காரணமாக கிழக்கு மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் பகுதிகளில் அதி தீவிர கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தற்போது வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து படிப்படியாக விலகி வருகிறது. பஞ்சாப், சண்டிகர், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில் பருவமழை விலகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஆனால் பருவமழை விலகும் இந்த நேரத்திலேயே, வட மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் மீண்டும் கனமழை தீவிரமடைந்துள்ளது. மேலும் தெற்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதன் தாக்கத்தால் வட மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் பரவலாக மேகங்கள் திரண்டு மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் INSAT-3DR செயற்கைக்கோள் இன்று (செப்டம்பர் 26) மாலை எடுத்த படத்தில், வட மற்றும் மத்திய இந்தியாவின் பெரும் பகுதியை மிகப் பிரம்மாண்ட மேகக்கூட்டங்கள் சூழ்ந்திருப்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

இதனையடுத்து கிழக்கு மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் பகுதிகளில் இன்று அதி தீவிர கனமழை பெய்யக்கூடும்; மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share