முதல் சந்திப்பிலேயே உஷார்! ஃபர்ஸ்ட் டேட்டில் உங்களை எச்சரிக்கும் ஆபத்தான ‘ரெட் பிளாக்ஸ்’!

Published On:

| By Santhosh Raj Saravanan

major red flags first date advice

முதன்முதலாக நமக்குத் தெரிந்த அல்லது மேட்ச் ஆன ஒரு நபரை நேரில் சந்திக்கச் செல்லும்போது (First Date) வயிறெல்லாம் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற ஒரு பரவச நிலை இருக்கும். என்ன உடை அணிவது, எப்படிப் பேசுவது என்று பல கணக்குகளுடன் நாம் செல்வோம். ஆனால், அந்தப் பரவச நிலையிலும் நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

முதல் சந்திப்பு என்பது ஒருவரைப் புரிந்து கொள்வதற்கான அஸ்திவாரம். அந்த நேரத்தில், அவர்கள் எவ்வளவுதான் அழகாகப் பேசினாலும், அவர்களது சில பழக்கவழக்கங்கள் அவர்கள் ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த நபரோ (Toxic person) அல்லது உங்களுக்கானவர் இல்லையோ என்ற எச்சரிக்கை மணியை அடிக்கும். உளவியல் ரீதியாக முதல் சந்திப்பிலேயே நீங்கள் கவனிக்க வேண்டிய அந்த ஆபத்து அறிகுறிகள், அதாவது ‘ரெட் பிளாக்ஸ்’ (Red Flags) இதோ!

ADVERTISEMENT
உணவக ஊழியர்களிடம் காட்டும் அநாகரிகம்

ஒரு மனிதனின் உண்மையான குணத்தை அவன் தன்னை விட எளிய நிலையில் இருப்பவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை வைத்தே கண்டுபிடித்துவிடலாம்.

  • அதிகாரத் தோரணை: உங்களிடம் மிகவும் அன்பாகவும் பவ்யமாகவும் பேசும் அந்த நபர், ஆர்டர் எடுக்கும் வெயிட்டரிடமோ (Waiters) அல்லது செக்யூரிட்டியிடமோ கோபமாகவோ, அநாகரிகமாகவோ அல்லது ஒருமையில் அதிகாரத் தோரணையிலோ பேசுகிறார் என்றால், அது மிகப்பெரிய ரெட் பிளாக் ஆகும்.
  • இன்று உங்களிடம் காட்டும் அந்தப் போலி அன்பு, சில நாட்களுக்குப் பிறகு மறைந்து, இதே அதிகார குணம் உங்கள் மீதும் பாயும் என்பதில் சந்தேகமே இல்லை.
முடிவில்லாத சுயபுராணம்

ஒரு ஆரோக்கியமான உரையாடல் என்பது இருவழிப் பாதை (Two-way communication) போன்றது. நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றிக் கேள்விகள் கேட்டுப் புரிந்து கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT
  • நான்… நான்… நான்… : ஆனால், அந்த நபர் உங்களைப் பற்றி எதையும் கேட்காமல், உங்களது பதில்களுக்கும் மதிப்பளிக்காமல், ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை தங்களைப் பற்றியே (தங்களது வேலை, தங்களது கார், தங்களது திறமைகள்) பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்றால், அவர் ஒரு ‘நார்சிசிஸ்ட்’ (Narcissist) எனப்படும் சுயநலக் குணம் கொண்டவராக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
  • இத்தகைய மனிதர்களுடன் வாழத் தொடங்கினால், உங்களது உணர்வுகளுக்கு அங்கே இடமிருக்காது.
முன்னாள் காதலரின் நிழல்

முதல் சந்திப்பில் தங்களது கடந்த காலத்தைப் பற்றிச் சாதாரணமாகப் பகிர்வதில் தப்பில்லை. ஆனால், பேச்சு எடுத்தபோதெல்லாம் தங்களது முன்னாள் காதலரைப் (Ex-partner) பற்றியே பேசுகிறார் என்றால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆழ்மனதின் ஏக்கம்: முன்னாள் காதலரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டுவதாக இருந்தாலும் சரி, அல்லது அவரது நினைவுகளைப் பகிர்வதாக இருந்தாலும் சரி, அந்த நபர் இன்னும் தனது கடந்த காலக் காயங்களில் இருந்தோ அல்லது அந்தப் பழைய நினைவுகளில் இருந்தோ முழுமையாக மீண்டு வரவில்லை என்பதையே இது காட்டுகிறது. நீங்கள் வெறும் ஒரு ‘ரீபவுண்ட்’ (Rebound – தற்காலிக வடிகால்) நபராகப் பயன்படுத்தப்படலாம்.

ADVERTISEMENT
மொபைல் திரையோடு காதல்

நீங்கள் முன்னால் அமர்ந்து ஆசையாகப் பேசிக் கொண்டிருக்கும்போது, அவர் உங்களது கண்களைப் பார்த்துப் பேசாமல், அடிக்கடி தனது மொபைல் போனைப் பார்த்துக் கொண்டோ அல்லது யாருக்கோ மெசேஜ் அனுப்பிக் கொண்டோ இருக்கிறார் என்றால், அவருக்கு உங்களோடு இருப்பதில் ஆர்வம் இல்லை என்று அர்த்தம்.

  • அவசர அழைப்புகள் அல்லது வேலை நிமித்தமான மெசேஜ்கள் தவிர்த்து, சாதாரணமாகச் சமூக ஊடகங்களை ஸ்க்ரோல் செய்வது உங்களது நேரத்திற்கும், உங்களுக்கும் அவர்கள் கொடுக்கும் மரியாதைக் குறைவைக் காட்டுகிறது. முதல் சந்திப்பிலேயே இந்த அலட்சியம் இருந்தால், எதிர்காலத்தை யோசித்துப் பாருங்கள்!
எல்லைகளை மீறும் அவசரம்

ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்ட எல்லைகள் (Physical & Personal Boundaries) உண்டு. முதல் சந்திப்பிலேயே உங்களது எல்லைகளை மீறி அவர்கள் அவசரப்படுகிறார்களா என்று கவனியுங்கள்.

  • உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் மது அருந்தச் வற்புறுத்துவது, உங்களுக்கு அசௌகரியத்தைத் தரும் பர்சனல் கேள்விகளைக் கேட்பது, அல்லது உங்களது அனுமதியின்றித் தொட்டுப் பேச முயற்சிப்பது போன்றவை மிக மோசமான ரெட் பிளாக்ஸ் ஆகும். உங்களது ‘நோ’ (No) என்ற வார்த்தைக்கு மதிப்பு தராத எவருடனும் உங்களது அடுத்த சந்திப்பு இருக்கக் கூடாது.

நன்றி: ஸ்ரீவித்யா மாரியப்பன், எழுத்தாளர் மற்றும் தொடர்பாடல் நிபுணர்

Photo of author
Santhosh Raj Saravanan

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share