பழகத் தொடங்கிய சில நாட்களிலேயே, “நீங்கதான் என் உலகம்”, “உங்களை மாதிரி ஒருத்தரை நான் பார்த்ததே இல்லை” என்று அள்ளித் தெளிக்கப்படும் அதீத பாசம்… தினசரி வந்து குவியும் விலை உயர்ந்த பரிசுகள்… ஒரு நிமிடம் கூட பிரிய மனமில்லாத அரவணைப்பு… (Love Bombing)
இதையெல்லாம் பார்க்கும்போது ஆரம்பத்தில் ஏதோ சினிமா பாணி காதல் போல மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், எச்சரிக்கை! இதற்குக் பின்னால் ஒரு ஆபத்தான உளவியல் வலை ஒளிந்திருக்கலாம். மருத்துவ மற்றும் உளவியல் உலகில் இதற்குப் பெயர் ‘லவ் பாம்பிங்‘ (Love Bombing). அதாவது, பாசத்தை ஒரு வெடிகுண்டு போல உங்கள் மீது வீசி உங்களை நிலைகுலைக்கச் செய்வது. இது என்ன, இதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று இங்குப் பார்ப்போம்.
லவ் பாம்பிங் என்றால் என்ன?
லவ் பாம்பிங் என்பது ஒரு நச்சுத்தனமான உறவின் (Toxic Relationship) ஆரம்பக் கட்ட அறிகுறியாகும். குறிப்பாக, மற்றவர்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க நினைக்கும் சுயநலக் குணம் கொண்டவர்கள் (Narcissists) இந்த உத்தியைப் பயன்படுத்துகிறார்கள்.
உங்களது நம்பிக்கையையும் அன்பையும் அசுர வேகத்தில் வென்றெடுத்து, உங்களை அவர்கள் மீது முழுமையாகச் சார்பிருக்க (Depend) வைப்பதே இவர்களது முதன்மை நோக்கம். நீங்கள் அவர்களின் பாச வலையில் விழுந்தவுடன், அவர்களது உண்மையான அதிகார முகத்தைக் காட்டத் தொடங்குவார்கள்.
லவ் பாம்பிங் அதிரடி அறிகுறிகள்
அளவுக்கு அதிகமான புகழ்ச்சி பழகிய முதல் வாரத்திலேயே உங்களை உலக அழகிப் போலவோ அல்லது ஆகச்சிறந்த மனிதர் போலவோ வானளாவப் பாராட்டுவார்கள். உங்களது குறைகளைக் கூடக் கொண்டாடுவது போல் நடிப்பார்கள். அந்தப் பாராட்டுக்கள் யதார்த்தமாக இல்லாமல், சற்றே அதீதமாக (Too good to be true) இருக்கும்.
விலை உயர்ந்த பரிசுகள் மற்றும் சர்ப்ரைஸ்கள் எந்தவொரு விசேஷமும் இல்லாத நாட்களிலும் திடீர் திடீரென விலை உயர்ந்த போன், உடைகள் அல்லது நகைகளைப் பரிசளித்து உங்களைத் திக்குமுக்காட வைப்பார்கள். இதன் மூலம் உங்களுக்குள் ஒருவிதக் கடமை உணர்வை (Obligation) உண்டாக்கி, உங்களால் அவர்களை விட்டு விலக முடியாதபடி செய்வார்கள்.
அசுர வேகத்தில் நகரும் காதல் “நாம் எப்போது கல்யாணம் செய்துகொள்ளலாம்?”, “நமது குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்கலாம்?” என்று பழகிய சில வாரங்களிலேயே எதிர்காலத்தைப் பற்றிப் பேசத் தொடங்குவார்கள். உறவை அடுத்தடுத்த கட்டங்களுக்கு மிக அவசரமாக எடுத்துச் செல்ல முயல்வார்கள்.
உங்களது நேரத்தை முழுமையாக ஆக்கிரமிப்பது நீங்கள் உங்களது நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தினருடனோ நேரத்தைச் செலவிடுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். 24 மணி நேரமும் நீங்கள் அவர்களுடன் மட்டுமே பேச வேண்டும், மெசேஜ் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இது அன்பைப் போலத் தெரிந்தாலும், உண்மையில் உங்களைத் தனிமைப்படுத்தும் (Isolation) ஒரு தந்திரம்.
ஆழ்மன எச்சரிக்கை: உண்மையான அன்பு எப்போதுமே நிதானமானது, அது உங்களது தனிப்பட்ட எல்லைகளை (Boundaries) மதிக்கும். ஆனால், ‘லவ் பாம்பிங்’ என்பது ஒரு சூறாவளி போன்றது; அது உங்களைச் சிந்திக்க விடாமல், உங்களது சுய அடையாளத்தை அழித்துத் தன் வசப்படுத்தும் ஆயுதமாகும்.
உண்மையான அன்புக்கும் லவ் பாம்பிங்கிற்கும் உள்ள வித்தியாசம்
- உண்மையான அன்பு: உங்களது தனிப்பட்ட நேரத்தை (Personal Space) மதிக்கும். நீங்கள் நண்பர்களுடன் வெளியில் சென்றால் மகிழ்ச்சியடையும். உங்களது கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த அன்பு காலப்போக்கில் மெதுவாகவும் சீராகவும் வளரும்.
- லவ் பாம்பிங்: நீங்கள் தள்ளி இருந்தால் கோபப்படும் அல்லது தங்களைக் கைவிட்டுவிட்டதாகக் நாடகமாடும் (Guilt-tripping). நீங்கள் யாருடன் பேச வேண்டும், என்ன உடை அணிய வேண்டும் என்று மறைமுகமாகக் கட்டுப்படுத்தும். ஆரம்பத்தில் உச்சத்தில் இருக்கும் இந்தப் பாசம், நீங்கள் அவர்களின் பேச்சுக்குக் கட்டுப்படாத போது சட்டென்று வெறுப்பாக மாறும்.
இதிலிருந்து தப்பிப்பது எப்படி?
உங்களது புதிய உறவில் இத்தகைய அறிகுறிகளை உணர்ந்தால், உடனடியாக உங்களது எல்லைகளை வகுத்திடுங்கள். “உங்களது அன்பு எனக்குப் பிடிக்கிறது, ஆனால் நாம் இன்னும் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொள்ளச் சற்றே கூடுதல் நேரம் தேவை” என்று கனிவாகவும் உறுதியாகவும் கூறுங்கள். நீங்கள் வைக்கும் இந்த நிதானத்திற்கு அவர்கள் கோபப்பட்டாலோ அல்லது உங்களைக் குற்றவாளியாக்க முயன்றாலோ, அவர்கள் செய்வது உண்மையான காதல் அல்ல என்பதை உணர்ந்து அந்த உறவிலிருந்து தள்ளி வந்துவிடுங்கள்!
நன்றி: ஸ்ரீவித்யா மாரியப்பன், எழுத்தாளர் மற்றும் தொடர்பாடல் நிபுணர்
