தவெக சார்பில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் இன்று (செப்டம்பர் 10) அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இரு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், ஏற்கெனவே அதிமுக சார்பில் களம் கண்டு வெற்றி பெற்று, அண்மையில் தவெகவில் இணைந்தவர்களுக்கே மீண்டும் தேர்தலில் போட்டியிட தவெக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் P.சத்தியபாமாவும், மதுராந்தகம் தொகுதியில் K.மரகதம் குமாரவேலும் போட்டியிடுகின்றனர்.
இது தொடர்பாக தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வருகிற 06.10.2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களாகக் கீழ்க்காண்பவர்கள் போட்டியிடுவார்கள்.
35 – மதுராந்தகம் (தனி): திருமதி K. மரகதம் குமரவேல், Ex.M.L.A., கழகத் துணைப் பொதுச் செயலாளர்
101 – தாராபுரம் (தனி): திருமதி P. சத்தியபாமா, Ex.M.L.A., திருப்பூர் தென்கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நம் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
