மதுரை பூசாரி ‘லாக்கப் மரணம்’ – விஜய் அரசுக்கு பாஜக, பாமக கண்டனம்

Published On:

| By Mathi

Madurai Priest 'Lockup Death' Triggers Condemnation Against Vijay's Govt.

மதுரை மாவட்டத்தில் பூசாரி பரமசிவம், போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்துக்கு பாஜக மற்றும் பாமக கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை:
மதுரை மாவட்டத்தில், வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் திரு. பரமசிவம் என்ற கோவில் பூசாரியை விசாரணை என்ற பெயரில் சிந்தாமணி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவலர்கள் கொடூரமாகத் தாக்கியதில், தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

ADVERTISEMENT

அதிகாரம் கையில் இருக்கும் ஆணவத்தில், சில காவலர்கள் பொதுமக்களிடம் அத்துமீறுவதும், சாமானியர்களை இப்படி அடித்து துன்புறுத்துவதும் கண்டிக்கத்தக்கது. கடந்த மாதம் நாகர்கோவில் சிறையில், காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட விசாரணைக் கைதி திரு. சபரி வர்மனின் மரணத்தில் இருந்து கூட, தவெக அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லையா? தமிழகத்தில் தொடரும் லாக்-அப் மரணங்களை கட்டுப்படுத்த, ஆளும் அரசு எம்மாதிரியான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது?

தேர்தலின் போது “லாக்-அப்” மரணங்கள் குறித்து பக்கம் பக்கமாக வசனம் பேசிய முதல்வர் விஜய், தற்போது தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையினரின் மூர்க்கத்தனத்தை கண்டும் காணாமல் கடந்து செல்வது ஏற்புடையதல்ல.

ADVERTISEMENT

எனவே, கோவில் பூசாரி திரு. பரமசிவம் அவர்களின் மரணம் குறித்த விசாரணை எவ்வித சமரசமும் இன்றி நடைபெற வேண்டும்! குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்துகிறேன்.

அன்புமணி கண்டனம்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: மதுரை சிந்தாமணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த கோயில் பூசாரி பரமசிவம் என்பவரை, காவல்நிலையத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டும் பயனின்றி உயிரிழந்தார் என்று வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பூசாரி பரமசிவம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த பரமசிவம் எந்த தவறும் செய்யவில்லை. அண்டை வீட்டாருடன் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணைக்காக கடந்த மாதம் 19-ஆம் தேதி அழைத்துச் சென்ற சிந்தாமணி காவல் நிலைய காவலர்கள், அவரை கொடூரமாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டு அவதிப்பட்ட பரமசிவம் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டும் பயனின்றி உயிரிழந்திருக்கிறார். காவல்துறையினர் தம்மை கொடூரமாகத் தாக்கியது தான் தமது உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுவதற்கு காரணம் என்று இறப்பதற்கு முன் பதிவு செய்யப்பட்ட காணொலியில் பரமசிவம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவோரை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்குவதும், அதில் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. நாகர்கோவில் கிளைச்சிறையில் சபரிவர்மன் என்ற மாற்றுத்திறனாளியும், தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞரும் முறையே சிறைத்துறையினர், காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததால் ஏற்பட்ட பதட்டம் விலகும் முன்பே மதுரை கோயில் பூசாரி பரமசிவம் உயிரிழந்தது மனித உரிமை மீறல்கள் குறித்த கவலையை அதிகரித்துள்ளது.

ஆட்சிக்கு வந்தால் காவல் மரணங்கள் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படும் என்று கடந்த தேர்தலின் போது தவெக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின் இது வரை 6 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இனிவரும் காலங்களில் காவல் மரணங்கள் நடப்பதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த பரமசிவம் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதற்கு காரணமான காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share