“உங்கள் வேலையைப் பாருங்கள்”.. கர்நாடகா முதல்வர் ஆணவப் பேச்சுக்கு குவியும் கண்டனம்!

Published On:

| By Mathi

Karnataka DKS Tamil Nadu

3 தமிழர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு, தமிழக தலைவர்கள் கருத்து தெரிவிப்பதற்கு எதிராக, “உங்கள் வேலையைப் பாருங்கள்” என்று சொன்ன கர்நாடகா முதல்வர் டிகே சிவகுமாருக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், “கர்நாடக மாநிலத்தில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் கொல்லப்பட்டது தொடர்பாக தமிழகம் தலையிடக் கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் திரு. டி. கே. சிவக்குமார் கூறியிருப்பதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். உலகில் தமிழ் மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு நியாயமும் நீதியும் கிடைக்கக் குரல் கொடுப்பது தமிழ்நாடு தலைவர்கள் மற்றும் அரசின் கடமையாகும்.

ADVERTISEMENT

இக்கொலை சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்த தமிழ்நாட்டு முதல்வரை, “உங்கள் வேலையைப் பாருங்கள்” என்று கர்நாடக முதல்வர் கடுமையான வார்த்தைகளில் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. வேறு மாநிலங்களில் கன்னட மொழி பேசும் மக்கள் பாதிக்கப்பட்டால் கர்நாடக அரசு வாயை மூடிக்கொண்டு வேடிக்கைதான் பார்க்குமா என்பதை விளக்க வேண்டுகிறோம்.

கர்நாடக நிர்வாகத்தில் தமிழ்நாடு தலையிடுவதாகப் பிரச்சனையைத் திசை திருப்புவதை விடுத்து, கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் கர்நாடக அரசு கவனம் செலுத்தட்டும்” என்றார்.

ADVERTISEMENT

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை: கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ள நிலையில், அந்த மரணங்களுக்குப் பொறுப்பானவர்கள் யார்? என்பதை விசாரிப்பதற்குப் பதிலாக, தமிழகத்திலிருந்து எழும் நீதிக்குரலை அடக்க முயலும் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரின் ஆணவப் பேச்சைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மூன்று தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. மூன்று குடும்பங்கள் நிராதரவாகியிருக்கின்றன. ஒருவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.சம்பவம் குறித்து அடுக்கடுக்கான சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில், தமிழக அரசு தனது வேலையைப் பார்க்கட்டும். கர்நாடக நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என்ற பொருளில், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் பேசுவது, பதில் சொல்ல வேண்டிய பொறுப்பிலிருந்து தப்பிக்கும் அரசியல் திமிராகவே பார்க்க வேண்டியுள்ளது.

ADVERTISEMENT

தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டால், தமிழ்நாடு அமைதியாக வேடிக்கை பார்க்க வேண்டுமா? கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் யார்? அவர்கள் எந்த நோக்கத்திற்காக அப்பகுதிக்குச் சென்றார்கள்? துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய அளவுக்கு என்ன நடந்தது? அவர்களிடம் ஆயுதம் இருந்ததா? இருந்தால் அதை அவர்கள் பயன்படுத்தினார்களா? கைது செய்யும் வாய்ப்பு ஏன் ஏற்படுத்தப்படவில்லை?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் வெளிப்படையான பதில் அளிக்க வேண்டிய கர்நாடக அரசு, எங்கள் மாநில விவகாரம் என்று கதவை மூடிக்கொள்வது ஏன்?

கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் அவர்களே! தமிழ்நாட்டை நோக்கி விரலை நீட்டுவதற்கு முன், உங்கள் அரசின் வனத்துறையினரை நோக்கி கேள்வி எழுப்புங்கள். தமிழர்களின் மரணத்தைப் பற்றி கேட்கும் தமிழகத் தலைவர்களிடம் தலையிடாதீர்கள் என்று சொல்வதற்கு முன், மூன்று தமிழர்களின் உயிர்கள் ஏன் பறிக்கப்பட்டன? வேறு மாநிலங்களில் அல்லது பிற நாடுகளில் கன்னடரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், நீங்கள் கேள்வி கேட்பீர்களா? மாட்டீர்களா?

CBI விசாரணை கோரிக்கையையும் நிராகரிக்கும் நீங்கள், உண்மை வெளிவர வேண்டும் என்பதில் ஏன் தயக்கம் காட்டுகிறீர்கள்? சுதந்திரமான விசாரணைக்கு அஞ்சுவது ஏன்? விசாரணையின் மூலம் உண்மை வெளிவந்துவிடக் கூடாது என்று நினைக்கிறீர்களா?

இவை அரசியல் கேள்விகள் அல்ல. உயிரிழந்த மூன்று தமிழர்களின் குடும்பங்கள் கேட்கும் நியாயமான கேள்விகள்.

மேலும், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், தமிழ் அமைப்புகள் மீதான தாக்குதல்கள், தமிழகத் தலைவர்களின், குறிப்பாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் திரைப்படப் பதாகைகள் மற்றும் உருவப்படங்கள் அவமதிக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தபோது, கர்நாடக அரசு எத்தனை வழக்குகளைப் பதிவு செய்தது? எத்தனை குற்றவாளிகளைத் தண்டித்தது? தமிழர்களின் பாதுகாப்புக்காக என்ன உறுதியான நடவடிக்கை எடுத்தது? அப்போது அமைதியாக இருந்தவர்கள், இப்போது மட்டும் கூட்டாட்சி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது ஏன்? காவிரி நீரில் தமிழகத்தின் உரிமைகளை மறுக்கும் கர்நாடக முதலமைச்சர், கூட்டாட்சி தத்துவத்தைக் குறித்து பேசலாமா?

கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் அவர்களே ! தமிழ்நாட்டின் குரலை நீங்கள் கட்டளையிட்டு அடக்க முடியாது. தமிழர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாட்டில் இருந்து கேள்வி கேட்பது எங்கள் உரிமை. நீதிக்காகக் குரல் கொடுப்பது எங்கள் கடமை. எல்லையில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்துவது எங்கள் பொறுப்பு.

எனவே, ஆணவமான அரசியல் பதில்களைத் தவிர்த்து, சம்பவத்தின் முழு உண்மையையும் கர்நாடக அரசு, மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மூன்று தமிழர்களின் மரணம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான சுதந்திரமான நீதித்துறை விசாரணை அல்லது CBI விசாரணை நடத்தப்பட வேண்டும்.

துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விசாரணை முடியும் வரை அவர்கள் மீது சட்டப்படி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உயிரிழந்த மூன்று தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும். முழுமையான விசாரணைக்குப் பிறகு, இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகள் என்றாலும் கூட, அவர்களுக்கு கடுமையான தண்டனை நீதித்துறையால் வழங்கப்பட வேண்டும்.

தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு கேள்வி கேட்கும்.
நீதி கிடைக்கும் வரை கேள்வி கேட்கும். உண்மை வெளிவரும் வரைப் போராடும்

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share