தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுப் பேசிய மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர், பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
“தமிழக அரசுப் பணியாளர்களின் முதல் இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இதுவரை ஓராண்டு (365 நாட்கள்) மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வந்தது. மூன்றாவது குழந்தை பிறக்கும் பட்சத்தில், அவர்களுக்கு 12 வாரங்கள் (84 நாட்கள்) மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. இந்தச் குறுகிய கால அவகாசம், பிரசவத்திற்குப் பிந்தைய உடல்நல மீட்பிற்கும் குழந்தைகளைப் பராமரிப்பதற்கும் போதுமானதாக இல்லை எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்தவண்ணம் இருந்தன.
இதனைக் கருத்தில் கொண்டு, இன்று பேரவையில் பேசிய அமைச்சர் சரத் குமார், “இனிவரும் காலங்களில் தமிழக அரசுப் பெண் ஊழியர்களுக்கு மூன்றாவது குழந்தை பிறக்கும் பட்சத்திலும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது” என்று அறிவித்தார்.
முன்னதாக, தனது உரையின் போது முன்னதாக அவர் பேசுகையில், AM, PM என நேரம் பார்க்காமல் வேலை பார்க்கும் முதல்வரே நாளைய பாரதத்தின் PM நீங்கள் தான் என, முதல்வர் விஜய் குறித்து புகழ்ந்து பேச தொடங்கினார். உரையின் நீளத்தைக் சுட்டிக்காட்டி பேரவைத் தலைவர் தலையிட முயன்றபோது, “சபாநாயகர் அவர்களே, அச்சப்பட வேண்டாம்; 15 நிமிடங்களுக்குள் எனது பதிலுரையை நிறைவு செய்துவிடுவேன்” எனக் கூறினார். அமைச்சரின் இந்த பதிலைக் கேட்டு அவையிலிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சிரித்தனர்.
