’10 ஆண்டு கால கூட்டணியை 10 நாளில்..’ தவெக வெற்றி குறித்து பேரவையில் ஆதவ் அர்ஜுனா பேச்சு

Published On:

| By Pandeeswari Gurusamy

Aadhav Arjuna Praises MK Stalin; EPS Defends Amit Shah

அண்ணா கட்சி ஆரம்பித்தபோது இருந்த கூட்டம் ‘ஜென் சி’ கூட்டம். அன்று கலைஞர் கருணாநிதிக்கு வயது 26 தான்.அண்ணாவின் தேர்தல் பிரச்சார வரலாற்றை இன்றைய அரசியல்வாதிகள் இன்னும் சரியாகப் படிக்கவில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 18) ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: 2026 தேர்தல் பிரச்சாரத்தில் கிட்டத்தட்ட 41 எதிர்க்கட்சிகள் எதிர்த்து நின்ற நிலையில் தவெக வெற்றி பெற்றுள்ளது. 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் முதல்முறையாக அம்மா தனித்து நின்றார். அப்போது ஆளும் கட்சிக்கு மிகப்பெரிய பலமும், முதலமைச்சராக இருந்த செல்வாக்கும் இருந்தது. ஆனால், எங்களது தலைவர், முதல்வர் தனியாகப் பிரச்சாரத்தை மக்கள் துணையுடன், பெண்கள் துணையுடன், இளைஞர்கள் துணையுடன் 41 கட்சிகளை எதிர்த்து நின்றார். நாங்கள் எப்படி வெற்றி பெறப் போகிறோம் என்று 1967 தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணா கூறினார். அதே கேள்வி எங்கள் தலைவரிடமும் கேட்கப்பட்டது. “இரண்டு வருடத்தில் கட்சி ஆரம்பித்து ஆளுங்கட்சி ஆகிவிடுவீர்களா? எடுத்தவுடன் முதலமைச்சராகி விடுவீர்களா? இந்த இளைஞர் கூட்டத்தை வைத்துக்கொண்டு நீங்கள் தேர்தலில் ஜெயித்து விடுவீர்களா? பூத் இருக்கிறதா, கிளைகள் இருக்கிறதா, ஒன்றியம், நகரம் இருக்கிறதா, மாவட்டச் செயலாளர் யார் என்று தெரியுமா?” என்ற கேள்விகள் கேட்கப்பட்டன. அண்ணாவின் தேர்தல் பிரச்சார வரலாற்றை இன்றைய அரசியல்வாதிகள் இன்னும் சரியாகப் படிக்கவில்லை.

ADVERTISEMENT

அண்ணா கட்சி ஆரம்பித்தபோது இருந்த கூட்டம் ‘ஜென் சி’ (Gen Z) கூட்டம். அன்று கலைஞர் கருணாநிதிக்கு வயது 26 தான். அப்படி 26 லிருந்து 40 வயதிற்குட்பட்ட இளைஞர் கூட்டத்தை எங்களது தலைவர் உருவாக்கினார். அதை அண்டர் எஸ்டிமேட் (Underestimate) செய்யும்போது அண்ணா கூறினார்—”முடியுமா, காலம் சரியுமா, போதுமான பலம் இருக்கிறதா, நாளை வரை பொறுத்திருக்கக் கூடாதா?” என்ற பேச்சுகள் இளைஞர்களுக்கு இருக்காது. இளைஞர்களுக்கு எப்போதும் வேகமும் அதிகம், விவேகமும் அதிகம். அப்படி 2026-இல்… 1967-இல் கிடைத்த வெற்றி, அதற்குப் பிறகு 1977-இல் ஏற்பட்ட இன்னொரு புரட்சி, அதற்குப் பிறகு இந்த 2026 தேர்தல் வெற்றி என்பது ஒரு சாதாரண வெற்றி கிடையாது.

முதலில் பேசியபோது எதிர்க்கட்சித் தலைவர் கூறினார், நீங்கள் 108 பேர் தான் என்று. அந்த 108 எப்படி உருவாக்கப்பட்டது? 41 கட்சிகள் எதிர்த்து நின்று, எதிர்க்கட்சித் தலைவர் தனது மேடையில் கூறினார், அங்கிருப்பவர்கள் எம்.எல்.ஏ என்றால் யார் என்று தெரியாது, அமைச்சர் என்றால் யார் என்று தெரியாது என்றார், இதுதான் அண்ணா கனவு கண்ட ஒரு புரட்சி. ஏழைகள், எளிமையானவர்கள், சாதி-மத பலம் அற்றவர்கள்… இங்கிருக்கும் பிள்ளைகள் பண்ணையாரின் பிள்ளைகளும் அல்ல, மன்னர் ஆட்சியின் பிள்ளைகளும் அல்ல. எங்கள் பெயர் உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், எங்களது சாதி உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், எங்களது மதம் உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும், ஏழைகளுக்கும் எங்களது பெயர் தெரியும். அதனால்தான் இந்த 108. அதனால்தான் 10 நாளில் நீங்கள் உருவாக்கிய 10 ஆண்டு கூட்டணியை எங்களுடைய தலைவரை நோக்கி ஒரு ஜனநாயகத்தை உருவாக்கினார், இந்த ஆட்சியை உருவாக்கினார்.

ADVERTISEMENT

மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலைவணங்கி, இடதுசாரி சிந்தனைகளைக் கொண்ட அனைத்துத் தோழர்களும்—காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் என அனைத்துத் தோழர்களும் மக்கள் ஏற்படுத்திய வெற்றிக்குத் தலைவணங்கி, எங்களோடு கொள்கை அளவில் இந்த ஆட்சியில் பங்கேற்று, முதல்முறையாகப் புரட்சியாளர் அம்பேத்கரின் கனவு இந்த அவையில் நிறைவேற்றப்பட்டது. எட்டு தலித் சகோதரர்கள் இன்று அமைச்சரவையில் இருக்கிறார்கள்.

பெரியார் கண்ட சமூக நீதி இங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்ணா கண்ட இளைஞர் கூட்டம் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இது வெறும் தேர்தல் வெற்றிக்கான ஒரு வெற்றி மட்டுமல்ல; ஒரு வரலாற்றைத் திருப்பிப்போட்ட வெற்றி! சாதியும் மதமும், எம்.எல்.ஏ ஆக வேண்டும் அமைச்சராக வேண்டுமென்றால் அதற்குப் பின்புலம் இருக்க வேண்டும் என்று ஒரு சாமானியன் நினைத்துப் பார்க்க முடியாத சட்டமன்றத்தில், அண்ணாவிற்குப் பின், எம்.ஜி.ஆருக்குப் பின் இன்று ஏழைகளும், எளிமையானவர்களும், இளைஞர்களும், பெண்களும் இந்த சட்டமன்றத்தில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். எங்கள் தலைவரின் நம்பிக்கையுடனும் அன்புடனும் பெண்கள் உருவாக்கிய வெற்றிதான் இந்த வெற்றி. இது 108 அல்ல, ஆறு கோடி மக்களின் கனவு. ஒரு ஏழை சாமானியனும் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற கனவு இது. இந்த கனவு இன்று வரலாறாக மாறியுள்ளது.

ADVERTISEMENT

“ஒரு சாதாரணக் கல்லூரி படிக்கும் மாணவன் நானும் மக்களுக்காக வேலை செய்தால், ஒரு ரூபாய் காசு செலவு செய்யாமல் ஒரு சட்டமன்ற உறுப்பினராக முடியும்” என்று நினைக்கலாம். எங்க தலைவர் எம்.எல்.ஏ சீட் கொடுத்த பிறகு ஒவ்வொருவரிடமும், “நீங்கள் பணம் வைத்திருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, யாரும் ஒரு ரூபாய் செலவு செய்ய வேண்டாம். தேர்தலில் மக்கள் நம்மை ஜெயிக்க வைக்கிறார்களோ இல்லையோ, மக்களிடம் நாம் உண்மையாக இருக்க வேண்டும்; ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும்” என்றார். காய்கறிகளை வாங்குவது போல ஒவ்வொரு ஓட்டையும் விலை கொடுத்து வாங்கும் கலாச்சாரத்தை ஒழித்தது எங்கள் தலைவர். இதை உறுதியாகச் சொல்கிறோம், நெஞ்சை நிமிர்த்தி நேர்மையாகச் சொல்லுகிறோம். நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஓட்டுக்குப் பணம் கொடுக்கக்கூடிய கலாச்சாரத்தைத் தூக்கி எறிந்தது வரலாற்றில் முதல்முறையாகத் தமிழக வெற்றிக் கழகம். எங்களது தலைவர் அதை உறுதியாக… அதை நாங்கள் இங்கே பதிவு செய்கிறோம். என்னுடைய முன்னுரையில் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.

இந்த வரலாற்று ரீதியான வெற்றிக்குப் பிறகு, இந்த 100 நாட்களுக்கான வெற்றி… முதலில் சமூக நீதிக்கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு. எத்தனையோ கட்சிகள் சமூக நீதியைப் பற்றிப் பேசினாலும், எங்களது தலைவர் தமிழக மக்களின் கடமையை நிறைவேற்றச் சமூக நீதிக்கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது ஒரு வரலாறு. சிறுபான்மையினர் சமூக நலத் திட்டங்களை அவர்களே செயல்படுத்த வேண்டும் என்ற ஐ.யூ.எம்.எல் (IUML) கட்சியின் 60 ஆண்டு கனவை நிறைவேற்றியவர் எங்களது தலைவர்.” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share