மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பு முறைகேடு சர்ச்சையில் 5 மண்டல குழுத் தலைவர்கள் உட்பட 7 பேரின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதனையடுத்து மண்டல குழுத் தலைவர்கள் பதவிகளைக் கைப்பற்ற திமுகவில் கடும் போட்டி நிலவுகிறது. Madurai DMK
மதுரை மாநகராட்சியின் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றது என்பது சர்ச்சை. இதனையடுத்து மாநகராட்சி ஆணையராக இருந்த தினேஷ்குமார் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை முடிவில் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
8 பேர் கைது
மேலும் மதுரை மாநகர குற்றப்பிரிவு போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் மதுரை மாநகராட்சியின் ஓய்வு பெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
55 பேருக்கு தொடர்பு
அத்துடன் மதுரை மாநகராட்சியின் திமுக மண்டல குழுத் தலைவர்கள் முதல் கம்ப்யூட்டர் பிரிவு ஒப்பந்த பணியாளர்கள் வரை மொத்தம் 55 பேருக்கு இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அமைச்சர்கள் நேரடி விசாரணை
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மதுரை மாவட்ட அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ. தளபதி மற்றும் திமுக மா.செ. மணிமாறன் ஆகியோர் மதுரை மாநகராட்சிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 4 மணி நேரம் நடைபெற்றது.
7 பேர் ராஜினாமா
இதனைத் தொடர்ந்து மண்டல குழு தலைவர்களான
1) சரவணபுவனேஸ்வரி
2) பாண்டிச் செல்வி
3) முகேஷ் சர்மா
4) சுவிதா
5) வாசுகி
நிலைக் குழு தலைவர்கள்
1) விஜயலட்சுமி
2) மூவேந்திரன்
என மொத்தம் 7 பேரிடமும் ராஜினாமா கடிதங்களையும் அமைச்சர்கள் பெற்றுக் கொண்டனர். முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இந்த ராஜினாமா கடிதங்கள் பெறப்பட்டன.
மேயர் இந்திராணிக்கு எச்சரிக்கை
மேயர் இந்திராணியையும் அமைச்சர்கள் குழு கடுமையாக எச்சரித்தது. மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த் மீது கடந்த மாதம் திமுக தலைமை நடவடிக்கை எடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கியது.
ராஜினாமா ஏற்பு
இந்த நிலையில் மண்டல குழு தலைவர்கள் உள்ளிட்ட 7 பேரின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டுள்ளன.
திமுகவில் கடும் போட்டி
இதனையடுத்து காலியாகிவிட்ட 5 மண்டல குழு தலைவர்கள் பதவிகளைக் கைப்பற்ற திமுக கவுன்சிலர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ. தளபதி, மா.செ. மணிமாறன் ஆகியோரது பரிந்துரையைப் பெற கவுன்சிலர்கள் முட்டி மோதுகின்றனர். ஆனால் இவ்வளவு சர்ச்சையாகிவிட்ட நிலையில் புகார்களில் சிக்காத கவுன்சிலர்களுக்குதான் மண்டல குழு தலைவர் பதவியை திமுக தலைமை வழங்கும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
