எடப்பாடி பழனிசாமிக்கு துணிச்சல் இல்லை – ஓபிஎஸ் ஆவேசம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Edappadi should resign : ops warning

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் கொளத்தூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய கருத்துக்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் மிசா கைதியாக இருந்ததை குறிப்பிட்டு, “சிறைக் கொடுமைக்கே அஞ்சாத நான் கொரோனாவிற்கா அஞ்சப் போகிறேன்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் குறித்து தவறாகப் பேசவில்லை என்று தெரிவித்தார்.இதற்கிடையில், முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டு பேசியுள்ளார்.

ADVERTISEMENT

அந்த வீடியோவில் ஓபிஎஸ், “ஸ்டாலின் குறித்து பழனிசாமி கூறிய கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அன்புத் தளபதி ஸ்டாலின் அவர்கள் கொரோனா காலகட்டத்தில் நோயாளிகளை நேரில் சந்தித்து ஆதரவு அளித்த ஒரே முதலமைச்சர். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா காலத்தில் நோயாளிகளைச் சந்திக்கும் அளவிற்கு துணிச்சல் இல்லை.

கொரோனா காலத்தில் இவர் திறமையாகச் செயல்பட்டது போல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்.கொஞ்சம் கூட அரசியல் நாகரிகம் இல்லாமல் வாழும் மனிதர் என்று சொன்னால் அது எடப்பாடி பழனிசாமி தான். அவரிடம் நாம் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது. அதற்காக இப்படிப் பேசுவது அநாகரீகச் செயல். அந்த அநாகரீகச் செயலை மட்டுமே தன் அரசியல் நடவடிக்கையில் வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, அரசியலில் எந்தக் காலகட்டத்திலும் உச்சத்தைத் தொட முடியாது என்று மக்கள் ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டார்கள்.

ADVERTISEMENT

எத்தனை தேர்தல்கள் வந்தாலும் பழனிசாமிக்கு தோல்விதான். ஏற்கனவே பத்து தோல்விகளைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, வரும் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து 11-வது தோல்வியைச் சந்திப்பார். இதுபோன்ற அரசியல் நாகரிகம் இல்லாத நபர்களை மக்கள் புறந்தள்ளுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share