சில நாட்களில் காரணமே இல்லாமல் மனம் சோர்வாக இருப்பது, எதிலும் ஆர்வம் இல்லாமல் போவது அல்லது வழக்கமான வேலைகளைக்கூட செய்ய மனமில்லாமல் இருப்பது இயல்பான அனுபவமாக இருக்கலாம்.
வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள், வேலை அழுத்தம், உறவுச் சிக்கல்கள், பணப் பிரச்சினைகள் போன்றவை மனநிலையை பாதிக்கலாம்.
ஆனால் இந்த உணர்வு நீண்ட நாட்கள் தொடர்ந்து, அன்றாட வாழ்க்கையையே பாதிக்கத் தொடங்கினால் அதைக் கவனிக்க வேண்டியது அவசியம்.
மனநிலை குறைவதற்கான அறிகுறிகள் என்ன?
மனநிலை குறைவாக இருக்கும்போது சோகம், பதற்றம், வழக்கத்தைவிட அதிக சோர்வு, தூக்கப் பிரச்சினை, கோபம் அல்லது தன்னம்பிக்கை குறைதல் போன்றவை ஏற்படலாம். சிலருக்கு முன்பு பிடித்த விஷயங்களில்கூட ஆர்வம் இல்லாமல் போகலாம்.
பொதுவாக இத்தகைய குறைந்த மனநிலை சில நாட்கள் அல்லது சில வாரங்களில் மேம்படக்கூடும்.
ஆனால் 2 வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், அது மனச்சோர்வின் அறிகுறியாக இருக்கலாம்.
தினசரி பழக்கங்களில் சிறிய மாற்றம் செய்யுங்கள்
மனநிலை சரியில்லாதபோது எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் மாற்ற முயற்சிப்பதைவிட, சிறிய இலக்குகளில் தொடங்குவது நல்லது.
தினமும் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்வது, போதுமான தூக்கம் பெறுவது, வெளியில் நேரம் செலவிடுவது போன்ற எளிய நடவடிக்கைகள் உதவலாம்.
நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருடன் பேசுவதும் முக்கியம். மனதில் இருப்பதை நம்பிக்கையான ஒருவரிடம் பகிர்வது, தனிமை உணர்வைக் குறைத்து பிரச்சினையை வேறு கோணத்தில் பார்க்க உதவும் என்று NHS கூறுகிறது.
எதிர்மறை எண்ணங்களை அப்படியே நம்ப வேண்டாம்
மனநிலை குறைவாக இருக்கும்போது, “என்னால் எதுவும் முடியாது”, “யாருக்கும் என்னைப் பிடிக்கவில்லை” போன்ற எதிர்மறை எண்ணங்கள் மீண்டும் மீண்டும் தோன்றலாம்.
இத்தகைய எண்ணங்கள் உணர்வுகளையும் நடத்தையையும் பாதித்து, ஒரு எதிர்மறை சுழற்சியை உருவாக்கக்கூடும்.
CBT (Cognitive Behavioural Therapy) போன்ற அணுகுமுறைகள் இந்த எண்ணங்களை அடையாளம் கண்டு, அவற்றை வேறு கோணத்தில் பரிசீலிக்க உதவுகின்றன.
பிரச்சினைகளை சிறிய பகுதிகளாகப் பிரித்து அணுகுவதும், செய்ய வேண்டிய வேலைகளுக்கு சிறிய இலக்குகளை நிர்ணயிப்பதும் பயனுள்ளதாக இருக்கலாம்.
எப்போது உதவி கேட்க வேண்டும்?
மனச்சோர்வு நீண்ட காலம் தொடர்ந்தாலோ, அன்றாட வேலைகள், தூக்கம் அல்லது உறவுகள் பாதிக்கப்பட்டாலோ மருத்துவர் அல்லது மனநல நிபுணரிடம் பேசுவது நல்லது. உதவி கேட்பது பலவீனம் அல்ல; மனநலத்தையும் உடல்நலத்தைப் போலவே கவனிப்பது அவசியம்.
தொடர்ந்து முயற்சி செய்தும் மனநிலை மேம்படவில்லை என்றால், தனியாக சமாளிக்க வேண்டியதில்லை. சரியான ஆதரவும் தேவையான சிகிச்சையும் கிடைத்தால், மனநிலையை மேம்படுத்துவதற்கான வழிகள் உள்ளன.
