அழகான, ஆரோக்கியமான தலைமுடிக்கு நல்ல ஷாம்பு அல்லது கண்டிஷனர் மட்டும் போதாது. தலைமுடியை எப்படி அலசுகிறோம் என்பதும் அதன் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தவறான முறையில் தலைமுடியைக் கழுவினால், முடி உதிர்தல், வறட்சி, பொடுகு, அதிக எண்ணெய் பசை மற்றும் முடி உடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
முடி பராமரிப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, தலைமுடியை அலசுவதற்கு முன் செய்யும் தயாரிப்பு முதல், உலர்த்தும் முறை வரை ஒவ்வொரு கட்டமும் முக்கியமானது.
சிறிய மாற்றங்களே தலைமுடியின் ஆரோக்கியத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
முதலில் தலைமுடியைச் சிக்கல் இல்லாமல் வாருங்கள்
தலைமுடியை நனைப்பதற்கு முன், அகலமான பற்கள் கொண்ட சீப்பைப் பயன்படுத்தி மெதுவாக வார வேண்டும்.
இது முடிச்சுகளை நீக்கி, தலைமுடி நனைந்த பிறகு ஏற்படும் உடைதலைக் குறைக்க உதவுகிறது. நனைந்த முடி மிகவும் மென்மையாக இருப்பதால், முன்கூட்டியே வாருவது பாதுகாப்பான வழியாகும்.
எண்ணெய் தடவுவது அவசியமா?
தலைமுடி மிகவும் உலர்ந்திருந்தால், அலசுவதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன் லேசாக எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம்.
இது எல்லோருக்கும் கட்டாயம் தேவையில்லை. ஆனால் உலர்ந்த தலைமுடி உள்ளவர்களுக்கு ஈரப்பதத்தைப் பாதுகாக்க உதவக்கூடும். அதிக நேரம் எண்ணெயைத் தலையில் வைத்திருப்பதைவிட, அளவோடு பயன்படுத்துவது நல்லது.
வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்துங்கள்
மிகவும் சூடான தண்ணீர் தலைமுடியின் இயற்கை எண்ணெய்களை அகற்றி, வறட்சியை அதிகரிக்கக்கூடும்.
எனவே, வெதுவெதுப்பான தண்ணீரில் தலைமுடியை நன்றாக நனைத்து, இறுதியாக சாதாரண அல்லது சற்று குளிர்ந்த நீரில் அலசினால் தலைமுடி மென்மையாக இருக்க உதவும்.
ஷாம்புவை ஸ்கால்ப்பில் மட்டுமே பயன்படுத்துங்கள்
பலர் ஷாம்புவை தலைமுடி முழுவதும் தடவுகிறார்கள். ஆனால், ஷாம்பு முக்கியமாக ஸ்கால்ப்பைச் சுத்தம் செய்வதற்காகத்தான்.
சிறிதளவு ஷாம்புவை கைகளில் நுரை வரச் செய்து, ஸ்கால்ப்பில் மட்டும் தடவி விரல் நுனிகளால் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அலசும்போது கீழே வரும் நுரை, முடியின் நீளமான பகுதியையும் சுத்தம் செய்துவிடும்.
நகங்களால் தேய்க்காதீர்கள்
தலையில் அரிப்பு இருந்தாலும், நகங்களால் பலமாகச் சொறிவது தவறான பழக்கம்.
அதற்குப் பதிலாக விரல் நுனிகளால் மெதுவாக வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும். இது ஸ்கால்ப்பை சுத்தப்படுத்துவதோடு, எரிச்சல் மற்றும் கீறல்கள் ஏற்படுவதையும் தவிர்க்கும்.
கண்டிஷனரை சரியான இடத்தில் பயன்படுத்துங்கள்
கண்டிஷனரை நேரடியாக ஸ்கால்ப்பில் தடவக் கூடாது.
முடியின் நடுப்பகுதி முதல் நுனி வரை மட்டும் பயன்படுத்தி, இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் கழித்து அலச வேண்டும். இதனால் தலைமுடி மென்மையாகவும், சிக்கல் இல்லாமலும் இருக்கும்.
தலைமுடியை மெதுவாக உலர்த்துங்கள்
தலைமுடியை அலசிய பிறகு துணியால் பலமாகத் தேய்ப்பது முடி உடைவதற்குக் காரணமாக இருக்கலாம்.
அதற்குப் பதிலாக மைக்ரோஃபைபர் துணி அல்லது மென்மையான பருத்தித் துணியால் தண்ணீரை மெதுவாக உறிஞ்சி, இயற்கையாக உலர விடுவது நல்லது. ஹேர் டிரையரைப் பயன்படுத்தினால், அதிக வெப்பத்தைத் தவிர்க்க வேண்டும்.
எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தலைமுடியைக் கழுவ வேண்டும்?
அனைவருக்கும் ஒரே மாதிரியான ஹேர் வாஷ் அட்டவணை பொருந்தாது. எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள ஸ்கால்ப் கொண்டவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது தேவைக்கேற்ப அலசலாம்.
உலர்ந்த அல்லது சுருள் முடி கொண்டவர்கள் வாரத்திற்கு ஒரு அல்லது இரண்டு முறை அலசினாலே போதுமானதாக இருக்கலாம். உங்கள் ஸ்கால்பின் தன்மை மற்றும் வாழ்க்கைமுறைக்கு ஏற்ப இதைத் தீர்மானிப்பதே சிறந்தது.
சரியான ஹேர் வாஷ் முறையே ஆரோக்கியமான தலைமுடிக்கான அடித்தளம்
தலைமுடியைச் சரியாக அலசுவது என்பது வெறும் சுத்தம் செய்வது மட்டுமல்ல. சரியான ஷாம்புவைத் தேர்வு செய்வது, ஸ்கால்ப்பை மென்மையாகச் சுத்தப்படுத்துவது, கண்டிஷனரை முறையாகப் பயன்படுத்துவது மற்றும் தலைமுடியை கவனமாக உலர்த்துவது போன்ற எளிய பழக்கங்களே முடி உதிர்வைக் குறைத்து, ஸ்கால்ப் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, தலைமுடியை நீண்ட காலம் வலிமையாக வைத்திருக்க உதவும்.
