கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படும் புளியோதரை என்றாலே அதன் தனி மணமும், சுவையும் நாக்கில் நீண்ட நேரம் நிற்கும். நல்லெண்ணெய், புளிக்காய்ச்சல், வறுத்த மசாலா மற்றும் சரியான அளவிலான புளிப்பு ஆகியவைதான் அந்த சுவையின் ரகசியம். வீட்டிலேயே கோவில் பிரசாதம் போன்ற புளியோதரையை எளிதாகச் செய்ய இந்த ரெசிபியைப் பின்பற்றலாம்.
தேவையான பொருட்கள்
- வேகவைத்த சாதம் – 3 கப் (உதிரியாக)
- புளி – ஒரு எலுமிச்சை அளவு
- நல்லெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
- கடுகு – 1 டீஸ்பூன்
- கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
- வேர்க்கடலை – ¼ கப்
- காய்ந்த மிளகாய் – 4 முதல் 5
- கறிவேப்பிலை – 2 கொத்து
- பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
- வெல்லம் – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
புளியோதரை மசாலாவுக்கு
- மல்லி – 2 டேபிள்ஸ்பூன்
- கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
- எள் – 1 டேபிள்ஸ்பூன்
- வெந்தயம் – ¼ டீஸ்பூன்
- மிளகு – ½ டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 5
இந்தப் பொருட்களை தனித்தனியாக வாசனை வரும் வரை வறுத்து, ஆறிய பிறகு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
புளிக்காய்ச்சல் செய்வது எப்படி?
புளியை வெந்நீரில் ஊறவைத்து கெட்டியான புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளுங்கள்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். பின்னர் பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து புளிக்கரைசலை ஊற்றுங்கள். தேவையான உப்பு மற்றும் சிறிதளவு வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்றாகக் கொதிக்கவிட வேண்டும்.
இறுதியாக அரைத்து வைத்துள்ள புளியோதரை மசாலாவை சேர்த்து கெட்டியான பதத்திற்கு வரும் வரை கிளறினால் புளிக்காய்ச்சல் தயார்.
சாதத்துடன் எப்படி கலக்க வேண்டும்?
சாதம் சூடாக இல்லாமல் ஆறியிருக்க வேண்டும். அதன் மீது சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி மெதுவாகக் கிளறுங்கள்.
பிறகு தேவையான அளவு புளிக்காய்ச்சலைச் சேர்த்து, சாதம் உடையாமல் மெதுவாக கலக்க வேண்டும். கலந்தவுடன் உடனே சாப்பிடாமல் 20 முதல் 30 நிமிடங்கள் ஊறவிட்டால், புளிக்காய்ச்சல் சாதத்தில் நன்றாக இறங்கி கோவில் பிரசாதம் போன்ற சுவை கிடைக்கும்.
கோவில் சுவை வர இந்த டிப்ஸை மறக்காதீர்கள்
புளியோதரையின் உண்மையான சுவைக்கு நல்லெண்ணெய் மிகவும் முக்கியம். சாதம் உதிரியாக இருக்க வேண்டும்; குழையக் கூடாது. வெந்தயத்தை அதிகமாகச் சேர்த்தால் கசப்பு சுவை வரும் என்பதால் அளவோடு பயன்படுத்த வேண்டும். புளிக்காய்ச்சலை முன்கூட்டியே செய்து குளிர்சாதனப் பெட்டியில் ஒரு வாரம் வரை சேமித்து வைத்து, தேவையானபோது சாதத்துடன் கலந்து பயன்படுத்தலாம். வாழையிலையில் பரிமாறினால் சுவையும் மணமும் இன்னும் அதிகரிக்கும்.
