ADVERTISEMENT

என் வீட்டில் ‘லண்டன்’ ஒட்டு கேட்கும் கருவி.. ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு

Published On:

| By Mathi

Dr Ramadoss PMK

தமது வீட்டில் லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட விலை உயர்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். Ramadoss PMK

பாமக மோதலின் அடுத்த கட்டமாக, தமது பெயரையே அன்புமணி பயன்படுத்தக் கூடாது என தடை விதித்தார் டாக்டர் ராமதாஸ். ஆனால் இந்த தடையை மீறி அன்புமணி ராமதாஸ் என்ற பெயரில் இன்றும் அறிக்கை வெளியானது.

ADVERTISEMENT

இதனிடையே விருத்தாசலத்தில் இன்று ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற பாமக நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது: தமிழ்நாட்டில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களில்தான் பலர் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகி இருக்கின்றனர். உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கத்தான் வாக்கு கேட்கிறோம். ஆனால் இப்போது சூரைத் தேங்காய் உடைத்து எறிவது போல வன்னியர்களுக்கும் எறிகிறார்கள்.. வன்னியருக்கு இதில் கிடைப்பது தேங்காயின் ஓடுதான்.

ஆகையால் இந்த முறை, “அய்யா (ராமதாஸ்) சொல்லும் பாமக வேட்பாளருக்குதான் ஓட்டு போடுவோம்; எவ்வளவு காசு கொடுத்தாலும் நாங்கள் ஏமாறமாட்டோம்; இந்த பணம் ரூ500, ரூ1000, ரூ2000 நாங்கள் பார்த்தது இல்லையா?என் பிள்ளைகள், பேரன் பேத்திகள் படிப்புதானே முக்கியம்” என நீங்கள் இருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு ரூ300 கொடுக்கிறான், ரூ350 கொடுக்கிறான், ரூ400 கொடுக்கிறான் என ஒவ்வொரு கூட்டத்துக்காக போய்க் கொண்டிருப்பது எல்லாம் ஒரு பொழப்பா?

ADVERTISEMENT

ஒருவருடைய வீடு பற்றி எரிகிறது. அதை அணைக்க 2 குடம் தண்ணீர் ஊற்றாமல் எவனோ காசு கொடுக்கிறான் என்பதற்காக ஓடுவதா? அந்த காசு அவனுக்கு எப்படி வந்தது? அது உன்னுடைய காசுதான்.. அவங்களுக்கு ஓட்டுப் போட்டால் பட்டை நாமம் சாத்துவார்கள்.

வன்னிய மக்கள் என் பேச்சை இத்தனை ஆண்டுகளாக ஏன் கேட்கவில்லை? நான் என்ன குற்றம் செய்தேன்? டாக்டர் தொழிலை விட்டுவிட்டு உங்களுக்காக 46 வருஷம் கஷ்டப்பட்டேனே.. 96,000 கிராமங்களில் என் கால்கள் பட்டிருக்கின்றன.. இன்னமும் இந்த மண்ணில் உங்களுக்காக பேசிக் கொண்டிருக்கிறேன்.. வாதாடிக் கொண்டிருக்கிறேன்.

ADVERTISEMENT

நம்மிடம் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தால், 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் இந்த NLC காரன் ரொம்ப பயப்படுவான்..ஆனால் இப்ப போய் பேசினால் ஒன்றுமே நடக்கவில்லை.

உங்களிடம் உள்ள ஓட்டு என்கிற ஆயுதத்தை ஏன் சரியாகப் பயன்படுத்தவில்லை? இவ்வளவு வருஷம்.. இவ்வளவு கஷ்டப்பட்டேன்.. 46 வருஷமாக உழைச்சு கஷ்டப்பட்டேன்..உங்களுக்காக பசியை அடக்கிக் கொண்டு போராடினேனே..

இந்த ஜாதி உருப்படாது.. எவனோ எக்கேடு கெட்டுப் போகிறான்..டாக்டர் தொழிலில் வாரி கொட்டிக்கலாம் என நான் வீட்டிலேயே இருந்திருக்கலாம் இல்லையா? அப்படியா நான் இருந்தேன்.. இல்லையே.. அப்படின்னா எனக்கு ஒரே ஒரு ஓட்டு போட்டிருக்கலாம் இல்லையா? இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி

பின்னர் விருத்தாசலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், என் வீட்டிலேயே, நான் உட்காரும் இடத்திலேயே, என் நாற்காலிக்கு பக்கத்திலேயே ஒட்டுக் கேட்கும் கருவி. யார் வெச்சாங்க? எதற்காக வெச்சாங்க? என்பதெல்லாம் ஆராய்ச்சி செய்துகிட்டு இருக்கோம்.

அந்த ஒட்டுக் கேட்கும் கருவி வெளிநாட்டுக் கருவி; லண்டனில் இருந்து வந்தது.அது சாதாரண விலை உள்ளது கிடையாது.. அதிகமான விலை உள்ள கருவி. 2 நாட்களுக்கு முன்னர்தான் கண்டுபிடித்தோம் என என திடுக்கிடும் குற்றச்சாட்டைத் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share