ஃபீனிக்ஸ் பறவை போல் வெற்றிப் பாதைக்கு அதிமுக திரும்பும்: எடப்பாடி பழனிசாமி

Published On:

| By Mathi

Edappadi Palaniswami

அண்ணா திமுக, ஃபீனிக்ஸ் பறவை போல் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது: தமிழக சட்டமன்றத் தேர்தலில் எழுச்சியுடன் முன்வந்து ஜனநாயகக் கடமையாற்றிய அனைத்து மக்களுக்கும் எனது வணக்கத்தையும், நன்றியையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் தான் இங்கு நீதிபதிகள். மக்களுக்காகத் தான் ஆட்சி. எனவே, மக்கள் வழங்கிய முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். எம்ஜிஆரின் வழியில், இந்தப் பின்னடைவில் இருந்து விரைவில் மீண்டு வருவோம்.

ADVERTISEMENT

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்களான பியூஷ் கோயல், ஜேபி நட்டா, பா.ஜ.க. தேசியத் தலைவர் நிதின் நபின் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

நம் கூட்டணியின் வெற்றிக்கு அயராது உழைத்த, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான, தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்- அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்களுக்கும்;

ADVERTISEMENT

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிகே வாசன், புதிய நீதிக் கட்சித் தலைவர் டாக்டர் ஏசி சண்முகம், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை டாக்டர் M. ஜெகன்மூர்த்தி மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதோடு, நமக்கு நிபந்தனையின்றி பேராதரவு அளித்த கட்சிகள், அமைப்புகள் மற்றும் சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருக்கும் நன்றி.

ADVERTISEMENT

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு அயராது உழைத்திட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசியுடன் ஃபீனிக்ஸ் பறவை போல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும்.

“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்த நம் புரட்சித் தலைவி அம்மாவின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணியில் என்றென்றும் ஈடுபடும் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share