மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக எல்.முருகன் கொடுத்த கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டதாக குடியரசுத் தலைவர் செயலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் செயலகம் வெளியிட்ட அறிக்கையில்,
”மத்திய அமைச்சரவையிலிருந்து பதவி விலகுவதாக இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் சமர்ப்பித்த ராஜினாமா கடிதத்தை, குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது பிரிவின் (2)-வது உட்பிரிவின் கீழ், பிரதமரின் ஆலோசனையின் பேரில், குடியரசுத் தலைவர் இந்த ராஜினாமாவை ஏற்றுக் கொண்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த எல்.முருகன், தமிழக அரசியலில் முழுநேரமாகக் கவனம் செலுத்த விரும்புவதாகக் கூறி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அக்டோபர் 13-ந் தேதி பிரதமர் மோடிக்கு எழுதிய 5 பக்க கடிதத்தில், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவதற்கான கட்சிப் பணிகளில் ஈடுபட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
2029-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்குத் தமிழக பாஜகவைத் தயார்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்த இருப்பதாகவும் மத்திய அமைச்சர் பதவியுடன் மாநிலங்களவை எம்.பி. பதவியிலிருந்தும் விலக விரும்புவதாகவும் அந்த கடிதத்தில் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.
