கூடங்குளம் அணு உலையில் பழுது: தமிழ்நாட்டிற்கு 562 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதில் சிக்கல்!

Published On:

| By Pandeeswari Gurusamy

kudankulam

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷ்ய நாட்டின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கூடங்குளத்தில் உள்ள முதலாவது அணு உலையின் ஜெனரேட்டர் பாதுகாப்பு அமைப்பில் திடீரென தொழில்நுட்பப் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த உலையில் இருந்து தற்காலிகமாக மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 1000 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்திற்குப் பின்னடைவு:

கூடங்குளத்தில் உள்ள இரண்டு அணு உலைகளில் இருந்தும் மொத்தமாக 1152 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குப் பங்கீடாகக் கிடைத்து வருகிறது. தற்போது முதலாவது அணு உலை நிறுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்திற்கு வர வேண்டிய 562 மெகாவாட் மின்சாரம் தடைப்பட்டு, அதனைப் பெறுவதில் தற்காலிகச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போதைய ஒரு நாள் மின்சாரத் தேவை சுமார் 19,000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. கோடைகாலத்தில் மின்சாரத்தேவை சுமார் 21,000 மெகாவாட் வரை எட்டும் சூழல் உருவானது. மாநிலத்தில் புதிய அரசு ஆட்சிக்கு வந்தது முதலே சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மின்தடைப் பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில், கூடங்குளம் அணு உலையின் இந்த முடக்கம் அரசுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

விஞ்ஞானிகள் தீவிரம்:

அணு உலையின் ஜெனரேட்டர் அமைப்பில் ஏற்பட்டுள்ள பழுதைச் சரிசெய்யும் முயற்சியில் கூடங்குளம் அணுமின் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பழுது விரைவில் சரிசெய்யப்பட்டு, இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share