கூடங்குளம்: உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கக் கோரி போராட்டம்!

Published On:

| By Balaji

உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கக் கோரி கூடங்குளம் அணுமின் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மூன்று, நான்காவது அணு உலைக்கான பணிகள் 75 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டு ஆண்டுகள் தற்காலிக பணிக்கான பொறியாளர் பதவிக்கு எழுத்துத் தேர்வு செட்டிகுளம் அணு விஜய் டவுன்ஷிப்பில் நடந்தது. 39 இன்ஜினீயர் பணியிடங்களுக்கு சுமார் 1,800 பேர் தேர்வு எழுதினர். இதில் 139 பேர் மட்டும் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்முகத் தேர்வு நடக்க இருந்தது.

ADVERTISEMENT

இதற்கிடையே எழுத்துத் தேர்வில் கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டும் யாருக்கும் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், வெளிமாவட்டம், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் அப்பகுதியினர் குற்றம்சாட்டினர்.

இதை அடுத்து கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி கிராம மக்கள் கூடங்குளம் பஞ்சாயத்து தலைவி வின்சி மணியரசு தலைமையில் அணுமின் நிலைய வளாகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதனால் பாதுகாப்பு கருதி அணுமின் நிலைய முன்பகுதி கேட் அடைக்கப்பட்டு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அணுமின் நிலையத்துக்கு வேலைக்கு செல்லும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் திரும்பி சென்றனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சேரன்மாதேவி உதவி கலெக்டர் சிந்து, ராதாபுரம் தாசில்தார் யேசுராஜன், கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உள்ளூரில் படித்த இளைஞர்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்துவது என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் உதவி கலெக்டர் சிந்து தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் மனோகர் காட்போலே, திட்ட இயக்குநர் சுரேஷ், மனிதவள மேம்பாட்டு பொதுமேலாளர் அன்புமணி மற்றும் போராட்டக்காரர்கள் சார்பில் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் உள்பட 20 பேர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

இதில் கூடங்குளம் சுற்றுவட்டாரப் பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். நடக்க இருக்கும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் அணுமின் நிலைய நிர்வாகம் சார்பில் நடக்க இருந்த நேர்முகத் தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் உள்ளூர் மக்கள் மீண்டும் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதால், அணுமின் நிலையம் நுழைவு வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

**-ராஜ்**

.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share