கொடைக்கானலில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சுற்றுலாத்தலங்கள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலுக்கு, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் வாக்குப்பதிவை அதிகரிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் வாக்குப்பதிவு நாளில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், கொடைக்கானலில் உள்ள முக்கியச் சுற்றுலாத் தலங்களை ஒரு நாள் மட்டும் மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கொடைக்கானலைச் சுற்றியுள்ள தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் மற்றும் பேரிஜம் ஏரி போன்ற இடங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
