கே.என்.நேரு வழக்கு: 25 இடங்களில் ரெய்டு.. 170 ஆவணங்கள், 13 மின்னணு சாதனங்கள் பறிமுதல்!

Published On:

| By Mathi

KN Nehru-DVAC Raid

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீதான பணி நியமன முறைகேடு வழக்கில் இன்று (அக்டோபர் 29) 25 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 170 ஆவணங்கள், 13 மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ADVERTISEMENT

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் 7 பேர் மீது, அமலாக்கத்துறையின் சென்னை அலுவலகம் அளித்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை தலைமையகத்தில் குற்ற எண் 02/2026-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பல்வேறு பிரிவுகளில் 2,538 பேரை பணி நியமனம் செய்ததில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

2024–25ஆம் ஆண்டில் தகுதியற்ற விண்ணப்பதாரர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு, அவர்கள் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், சுகாதார ஆய்வாளர், வரைவாளர் உள்ளிட்ட பணிகளில் நியமிக்கப்பட்டதாகவும், வசூலிக்கப்பட்ட பணம் ஹவாலா வழியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக இன்று சென்னை, திருச்சி, கோவை, நாமக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் 25 இடங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ADVERTISEMENT

இந்தச் சோதனையில் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமான 170 ஆவணங்கள் மற்றும் 13 மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது..

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share