பொருளாதார ஆய்வாளர் கலையரசனை அதிகாலை 5 மணிக்கு கைது செய்யுங்கள் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருக்க வாய்ப்பில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ஆய்வாளர் கலையரசன் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 29) செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவனிடம் கலையரசன் கைது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த திருமாவளவன், “கலையரசன் கைது செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் குறிப்பிடத்தக்க ஆளுமையான அவர், தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை குறித்து நடுநிலையோடு நின்று தனது கருத்தை நெடிய கட்டுரையாகப் பதிவு செய்தவர்.
தமிழ்நாடு அரசுக்கு எதிராக இன்ஸ்டாகிராமில் அவதூறாக எழுதியதாகக் கூறி அவரைக் கைது செய்திருக்கிறார்கள். ஆனால், அது போலி ஐடி என்றும் அவரது படத்தைப் பயன்படுத்தி யாரோ பதிவிட்டிருக்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
உண்மை தெரிந்த பிறகு அவரை விடுவித்திருப்பதாகவும் தெரிகிறது. காவல்துறையின் இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல. ஜனநாயக சக்திகளைக் காயப்படுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது” என்றார்.
அப்போது செய்தியாளர்கள், “அதிகாலை 5 மணிக்கு கைது செய்யும் அடக்குமுறை தொடர்கிறதே? காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய் இதைக் கண்காணிக்கிறாரா?” எனக் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த திருமாவளவன், “5 மணிக்குப் போய் கைது செய்யுங்கள் என்று யாரும் ஆர்டர் போட்டதற்கு வாய்ப்பில்லை. முதலமைச்சர் போய் நீங்கள் 5 மணிக்குக் கைது செய்யுங்கள் என்று சொல்லமாட்டார். எப்படி கைது செய்ய வேண்டும் என்பதை காவல்துறைதான் முடிவு செய்யும். கூட்டம் கூடக்கூடாது என்ற அடிப்படையில் அவர்கள் 5 மணிக்குக் கைது செய்திருக்கலாம். ஆனால், அது ஏற்புடையதல்ல. நாங்கள் அதைக் கண்டித்திருக்கிறோம். எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் உடனடியாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு” என்று தெரிவித்தார்.
